சென்னை:கலாஷேத்ரா நடனப் பள்ளியில் 1995 - 2001 ஆண்டு வரை படித்த மாணவி ஒருவர், முன்னாள் பேராசிரியர் ஷீஜித் கிருஷ்ணா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட முன்னாள் மாணவியிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, நடனப் பள்ளியின் பேராசிரியர் ஷீஜித் கிருஷ்ணாவை கடந்த மாதம் நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா நடனப் பள்ளி பேராசிரியர் ஷீஜித் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், 20 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தற்போது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், அந்தப் பெண் தற்போது இந்தியாவிலேயே இல்லை எனவும், அந்த பெண் வாழ்க்கையில் நடந்த அனைத்திற்கும் மனுதாரரை குறை கூறி புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஷீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர்கள் புகார் அளிக்க முன்வரமாட்டார்கள்" என வாதிட்டார்.
மேலும், ஷீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறினார். இதையடுத்து, முன்னாள் மாணவி தரப்பில் மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை மே 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க:கைது நடவடிக்கை.. பெலிக்ஸ் ஜெரால்ட் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!