சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, தேடுதல் குழுவை நியமித்து, தமிழ்நாடு அரசால் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த குழுவினர், மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி இடம் பெறவில்லை எனக் கூறி, தேடுதல் குழு நியமித்த தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் ஜெகன்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவை நியமித்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கில் தன்னை இணைக்க வேண்டும் என மனுதாரர் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் சென்னை பல்கலைக்கழகத்தை இணைக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளதாக, பல்கலைக்கழகத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.