கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பல்வேறு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி ஆஜராகி, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரய விற்பனை காவல்துறைக்கு தெரிந்தே நடந்துள்ளதாகவும், தங்களது பணியை செய்யாத போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
கர்நாடகா, பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு கள்ளச்சாராயம் வருவதாகவும், எனவே இது தொடர்பாக சிபிஐ-யால் மட்டுமே விசாரிக்க முடியும் எனவும், சிபிசிஐடி விசாரணை நடத்தினால் தவறு செய்தவர்கள் தப்பிவிடுவார்கள் என குறிப்பிட்டார்.