சென்னை:கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் சுமார் 69 பேர் மரணம் அடைந்தனர். பலர் கண்பார்வை பாதிப்புக்கு உள்ளாகினர்.
இந்த வழக்கில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது, அவற்றை கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யபட்டனர். சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்த இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய நபரான கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, பரமசிவம் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
'தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள்'
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன், இந்த வழக்கில் முக்கிய நபர்களான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். சாராய கடத்தல் மற்றும் விற்பனையில் இவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இவர்களிடம் இருந்து கள்ளச்சாராய மாதிரிகள் பறிமுதல் செய்யப்பட்டு இவர்கள் தான் விற்பனை செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் மோசமான மற்றும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள். எனவே, இவர்களுக்கு எந்த விதமான கருணையும் காட்டக்கூடாது. இவர்களுக்கு எதிராக 30 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.