கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் முட்டத்துவயலில் உள்ள ஈஷா யோகா மைய வளாகத்தில், ஈஷா அறக்கட்டளை சார்பில், மின்சார தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இந்நிலையில், சுப்ரமணியன் என்பவர் இந்த தகனமேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு விசாரணையின்போது இந்த மின்சார தகனமேடையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக, இந்த மின்மயான கட்டுமானப் பகுதிக்குள் தொடர்பு இல்லாத நபர்கள் யாரும் நுழையக்கூடாது என கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஜூன் 14ஆம் தேதி பெரியார் திராவிடர் கழகத்தினர் தன்னிச்சையாக 'உண்மை கண்டறியும் குழு' என்ற பெயரில் ஈஷாவிற்குள் செல்ல முயன்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஈஷாவிற்குள் செல்ல முயன்ற தங்களை தடுத்து நிறுத்தி தாக்கியதாக, பெரியார் திராவிடர் கழக ராமகிருஷ்ணன் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.