மதுரை:புதுக்கோட்டை கரம்பக்குடியை சேர்ந்த சண்முகம் என்பவர், புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், இந்த நீரை அருந்திய பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரும், கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளரும் சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் நீரின் மாதிரிகளை எடுத்து ஆய்விற்காக அனுப்பினர்.
அவர்கள் வழக்கை முறையாக விசாரிப்பதாக தெரியவில்லை. புதுக்கோட்டையில் இரட்டை குவளை முறை தற்போதும் நடைமுறையில் உள்ளது. வன்னியன் விடுதி, அரையாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள டீக்கடைகளில் இரட்டை குவளை முறை நடைமுறையில் உள்ளது. எனவே, புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட வழக்கை வேறு சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றுவதோடு, அந்த கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.