சென்னை: மாணிக்கம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டியன் என்கின்ற சூர்ய பிரகாஷ் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். சரத்குமார் நடிப்பில் வெளிவந்த மாயி, திவான் உள்ளிட்ட படங்களை சூர்ய பிரகாஷ் இயக்கியுள்ளார்.
சூர்ய பிரகாஷ் மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், "எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்
இயக்குநர் சூர்ய பிரகாஷ் இறுதிச் சடங்கு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அவரது சொந்த ஊரான எடப்பட்டியில் இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:"ஆதி அண்ணாவை பாக்கனும்..".. தேம்பி தேம்பி அழுத ரசிகை.. வைரலாகும் வீடியோ!