தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை டூ ஜெர்மன் பயணத்தில் விமானத்துக்குள் ஒழுகிய தண்ணீர்.. நனைந்த பயணிக்கு 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு!

சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு பயணத்தின்போது விமானத்தில் தண்ணீர் ஒழுகியதால் பாதிக்கப்பட்ட பயணிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, 'லுஃப்தான்சா' ஜெர்மன் விமான சேவை நிறுவனத்துக்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat)

சென்னை:சென்னை அடையாறு இந்திரா நகரை சேர்ந்த ஜோஜு டோமினிக் என்பவர் சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், 'கடந்த 2022ம் ஆண்டு நானும், எனது மனைவி ஜாஸ்மின் டோமினிக்கும் லுஃப்தான்சா ஜெர்மன் விமான சேவை நிறுவனத்தில் சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு செல்ல 3 லட்சத்து 57 ஆயிரத்து 509 ரூபாய் பணம் செலுத்தி இரு டிக்கெட்டுகள் பதிவு செய்தோம்.

பதிவு செய்யப்பட்ட பயண தினத்தன்று விமானம் 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக வந்தது. அதற்கு நிறுவனத்தின் தரப்பில் விமானத்தை சுத்தம் செய்யும் பணிகள் இருந்ததால் காலதாமதமானதாக விளக்கமளிக்கப்பட்டது. தாமதமாக புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்தபோது, விமானத்தில் தண்ணீர் ஒழுகியது. இதுகுறுித்து புகாரளித்ததற்கு தண்ணீர் சொட்டுவதை நிறுத்த போர்வையை உபயோகிக்குமாறு விமான பணிப்பெண்கள் அறிவுறுத்தினர்.

மேலும், ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமரவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விடுவோம் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர். பின்னர் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு பதிலாக ப்ரீமியம் வகுப்பு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாக வேறொரு விமான ஊழியர் வந்து தெரிவித்தார்.

இதற்கிடையில், விமானம் தாமதமாக கிளம்பியதால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஜெர்மனியில் இருந்து கனடா செல்லும் விமானத்தில் எங்களால் பயணம் செய்ய முடியவில்லை. அதன் விளைவாக வேறு விமானத்தின் மூலம் கனடா செல்ல வேண்டியதானது.

மூன்று மாதத்திற்கு பிறகு செப் 2023 இல் ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு நாங்கள் பயணம் செய்த லுப்தான்சா ஜெர்மன் நிறுவன விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, உடனே புறப்பட்ட இடத்திலேயே விமானம் தரை இறங்கியது. மூன்று நாட்களுக்கு பின் பயணம் செய்ய டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், விமானம் ரத்தான நாளில் இரவு தங்குவதற்கான வசதிகளை செய்து தராமல் விமான நிலைய இருக்கையிலேயே ஓய்வெடுக்க கட்டாயப்படுத்தினர்.

நீண்ட கோரிக்கைக்கு பிறகு தங்குமிடம் வழங்கப்பட்டது. அங்கு செல்ல வீல் சேர்கள் இல்லாததால் சுமார் 3 கி.மீ நடந்து செல்ல நேரிட்டது. போதுமான உணவுகள் வழங்கப்படவில்லை. கூப்பன் அடிப்படையில் 35 யூரோ (3,196 ரூபாய்) மட்டுமே வழங்கப்பட்டது. அதனால் பயண கட்டணத்தை திரும்ப வழங்கவும், எங்களுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்கவும் விமான நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று ஜோஜு டோமினிக் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் குறித்து ஆணையம் தரப்பில் விளக்கமளிக்க சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டும், எழுத்துப்பூர்வ விளக்கமோ? வழக்கறிஞர்களோ? யாரும் ஆஜராகவில்லை.

இந்தப் புகாரை விசாரித்த ஆணையத்தின் தலைவர் ஜிஜா, உறுப்பினர்கள் சிவக்குமார், நந்தகோபாலன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'விமான நிறுவனம் தனது சேவையை சரியாக வழங்கவில்லை என்பது விசாரணையில் உறுதியாகிறது. மனுதாரருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவாக 5 ஆயிரம் ரூபாயும் அவருக்கு சம்பந்தப்பட்ட விமான சேவை நிறுவனம் 8 வாரங்களில் வழங்க வேண்டும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details