கரூர்:ஆயிரக்கணக்கான பக்தர்களுடன், கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் விழா நேற்று (மே 17) இரவு ஆட்டம் பாட்டத்துடன் விமர்சையாக நடைபெற்றது. கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வைகாசி திருவிழா கடந்த மே 12ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக பூச்சொரிதல் விழா, நேற்று (மே 17) இரவு துவங்கி இன்று (மே 18) அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது. இதனையொட்டி, கோயில் மண்டபத்தில் மகாசண்டிஹோமம் நடைபெற்றது.
பின்னர், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பூச்சொரிதல் விழாவையொட்டி, கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு பூத்தட்டு கொண்டு வந்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் கரூர், வெங்கமேடு, தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் இருந்து 49 பூத்தட்டுகள் மாரியம்மன் கோயில் வரை கொண்டு வரப்பட்டது.
அவர்கள் தங்களது பகுதியில் இருந்து அம்மனை அலங்கரித்து, ரதத்தில் வைத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். ரதத்தினை பின்தொடர்ந்த படியே, பக்தர்கள் அம்மனை வேண்டியபடி பூத்தட்டுகளுடன் நடந்து வந்தனர். அப்போது ரதத்திற்கு முன்பாக வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு, இசை வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.