ராமநாதபுரம்:தமிழ் மாதங்களில் வழிபாட்டிற்கு உகந்ததாகவும், சிறப்பு மிகுந்த மாதமாகவும் உள்ளது ஆடி. காரணம், ஆடி மாதத்தில்தான் தென்மேற்கு பருவமழை துவங்கி காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும், விவசாயம் செழிக்கும்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்களில் உள்ள ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில்தான் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்வது, புதுமணத் தம்பதிகளுக்கு தாலி பிரித்துக் கோர்ப்பது, தங்களுடைய முன்னேர்களுக்கு தர்ப்பணம் வழங்குவது உள்ளிட்ட பலவற்றை செய்வர்.
இந்தநிலையில், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களின் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். ஆடி - அமாவாசை தினத்தை முன்னிட்டு, நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர்.