திருநெல்வேலி:நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த முறை (2019) திமுக வெற்றி பெற்ற நிலையில், அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள 2024 தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் நேரடியாக களம் காண்கின்றன.
2019 தேர்தல் வாக்குப்பதிவு விபரம்:2019 மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் மொத்தம் வாக்காளர்கள் 15,46,212 உள்ள நிலையில், ஆண்கள் 7,58,331 வாக்காளர்களும், பெண்கள் 7,87,813 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 68 உள்ளனர்.
இத்தேர்தலில் 10,39,761 (68.8%) வாக்குகள் பதிவாகின. திமுக சார்பில் ஞானதிரவியம், அதிமுகவில் மனோஜ் பாண்டியன், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் ஞானதிரவியம் 5,22,993 (50.02%) வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். இரண்டாவது இடத்தில், அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டின் 3,37,273 (30.25%) வாக்குகள் பெற்றிருந்தார். நாம் தமிழர் கட்சியின் சத்யா 49,935 (5%) வாக்குகள் வாங்கியிருந்தார்.
திமுக வெற்றிக்கான காரணம்: 2019இல் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் வெற்றி பெற்றார். பொதுவாக அப்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுக மீது மக்கள் மத்தியில் அதிருப்தி இருந்தது திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணம். மேலும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு மற்றும் இரட்டை தலைமையால் அக்கட்சி வலுவிழந்து காணப்பட்டது. அதனால் 38 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. திருநெல்வேலி தொகுதியில் திமுக வெற்றிப் பெற்றது. இதுதவிர, ஞானதிரவியம் வெற்றி பெ அவரது சமுதாயம் மற்றும் மதரீதியான ஓட்டுகளும் முக்கிய காரணமாக அமைந்தது.
கணிசமாக குறைந்த வாக்குப்பதிவு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 16,54,503 உள்ள நிலையில், ஆண்கள் 8,08,127 வாக்காளர்களும், பெண்கள் 8,46,225 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 151 வாக்காளர்களும் உள்ளனர்.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ராபர்ட் ப்ரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 10,60,461 (64.10%) வாக்குகள் பதிவாகின. இது 2019ஆம் அண்டு தேர்தலில் பதிவான வாக்குகளைவிட 3.8% குறைவு.
திமுகவுக்கு எழுந்த இப்படியொரு சிக்கல்?:திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ள ராபர்ட் புரூஸ், பாஜக மதவாத கொள்கையை கடைப்பிடிப்பதாகவும், பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று எடுத்துரைத்தும் பிரசாரம் மேற்கொண்டார். மேலும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கே நேரில் சென்று வாக்கு சேகரித்தார்.
காங்கிரஸ் கட்சியில் நிலவும் உள்கட்சி பூசல் காரணமாக நெல்லை தொகுதியில் வேட்பாளரை முடிவு செய்வதில் காங்கிரஸ் தலைமை பெரிதும் குழப்பம் அடைந்தது. மிக தாமதமாகவே வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டார். அதிலும், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்ததாக தெரிந்தது. குறிப்பாக முன்னாள் எம்.பி. ராமசுப்பு, வேட்பாளர் ராபட் புரூஸ்சுக்கு எதிராக சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இத்தகைய சூழலில், வேட்பாளர் அறிவிக்கப்பட்டு சில நாட்கள் வரையிலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ராபட் புரூஸுக்கு ஆதரவாகப் பரப்புரையில் ஈடுபடத் தயக்கம் காட்டினர். இதனால் பெரும்பாலான இடங்களில் திமுக நிர்வாகிகள் தான் வேட்பாளரை அழைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்தனர். பின்னர் கட்சித் தலைமை அறிவுறுத்தியதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் தயக்கத்தைக் கைவிட்டு வேட்பாளரோடு இணைந்து தேர்தல் பணியாற்றினர்.
அதிமுக வேட்பாளரின் தனிப் பாதை:அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணியை பொருத்தவரை மக்கள் மத்தியில் மிகவும் எளிமையானவராக அடையாளம் காணப்பட்டார். நெல்லை தேர்தல் களத்தைப் பொருத்தவரை காங்கிரஸ், பாஜக தான் கருத்து ரீதியாகவும், பிரச்சார ரீதியாகவும் போட்டிப் போட்டுக் கொண்டனர். இவர்களுக்கு மத்தியில் ஜான்சி ராணி எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் தனிப் பாதையில் பயணித்து சத்தம் இல்லாமல் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அதிமுக வாக்குகளைக் குறிவைத்ததா பாஜக?:திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் போட்டியிட்டுள்ள நயினார் நாகேந்திரன் தனது முதல் தேர்தல் பரப்புரையின்போது அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் பாடல்களை ஒலிக்கச் செய்து பரப்புரையைத் தொடங்கினார். நயினார் நாகேந்திரன் தற்போது பாஜகவில் போட்டியிட்டாலும், ஆரம்பத்தில் அவர் தீவிர அதிமுக விசுவாசி. எம்ஜிஆரால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் பணியாற்றியவர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். ஆனால் அப்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. ஆகையால், அதிமுகவின் வாக்குகளும் அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. ஆனால், இந்த முறை அதிமுக, பாஜக கூட்டணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களை குறிவைத்த நாம் தமிழர்:நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை தனக்கே உரியப் பாணியில் முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்தது. தொடர்ந்து முதல் ஆளாகப் பிரசாரத்தையும் தொடங்கினார் சத்யா. பெரிய கட்சிகளைப் போன்று பிரம்மாண்டமான கூட்டங்களைக் கூட்டாமல், தனக்கு ஆதரவளிக்கக்கூடிய நபர்களை மட்டும் வேட்பாளர் சத்யா கூட வைத்துக் கொண்டார். இலவசம் மற்றும் சலுகை அறிவிப்புகள் இல்லாமல் இயற்கை பாதுகாப்பு, விவசாயிகள் பாதுகாப்பு, இளைஞர்கள் நலன் போன்றவை தொடர்பான திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்து வாக்காளர்களை கவர முயன்றார்.
வெற்றி யாருக்கு?:2024 நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், நெல்லை காங்கிஸ் வேட்பாளர் மீது சொந்தக் கட்சிக்காரர்களே அதிருப்தியில் இருந்தது, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை மையமாக வைத்து எழுந்த 4 கோடி ரூபாய் பண விவகாரம் என நெல்லை தொகுதியில் பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லாத தொகுதியாக நெல்லை விளங்கியது. திமுக கூட்டணி பலத்தில் நிற்கும் காங்கிரஸ் மற்றும் லோக்கல் வெயிட் என்ற முறையில் களம் கண்டுள்ள பாஜக என இரு தேசியக் கட்சிகளுக்கும் இடையே இங்கு நீயா, நானா போட்டி நிலவி வருகிறது. அதேசமயம், நெல்லையில் கடந்தமுறை அதிமுக மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது. மொத்தத்தில் காங்கிரஸ், அதிமுக, பாஜக என மும்முனைப் போட்டி நிலவும் நெல்லையில் வெற்றிக்கனியை பறிக்க போவது யார் என்பது ஜூன் 4-ம் தேதி தெரிந்துவிடும்.
இதையும் படிங்க:தேர்தல் 2024: ஸ்டாலின் முதல் அமித் ஷா வரை... சூடான தேர்தல் களம்! மதுரையில் வெற்றி யாருக்கு?