தென்காசி:மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சம் மாவட்டமான தென்காசியில்தான், 'ஏழைகளின் நயாகரா' என்றழைக்கப்படும் குற்றால அருவிகள் அமைந்துள்ளன. குற்றாலம் மட்டுமின்றி, காசி விஸ்வநாதர் கோவில், சங்கரநாராயணன் கோவில் என கோவில்களுக்கும் பேர்போன பகுதியாக தென்காசி மாவட்டம் திகழ்கிறது.
தமிழகத்தின் 37வது நாடாளுமன்ற தொகுதியான தென்காசி தனித் தொகுதியில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தற்போது இங்கு மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 7,42,158; பெண் வாக்காளர்கள்: 7,73,822; மூன்றாம் பாலினத்தவர் 203. ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் தேர்த்து ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் 31,664 பேர் கூடுதலாக உள்ளனர்.
திமுகவுக்கு 'கை'மாறிய தொகுதி:காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று சொல்லும் அளவுக்கு, நாடாளுமன்றத் தேர்தல்களில் இதுவரை அக்கட்சி இங்கு ஒன்பது முறை வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியே இங்கு தொடர்ந்து போட்டியிட்டு வந்தது. இந்த தேர்தல் நடைமுறைக்கு மாறாக, கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் அங்கம் வகித்த கூட்டணியில் பிரதான கட்சியான திமுக இங்கு போட்டியிட்டது. அக்கட்சியின் வேட்பாளர் தனுஷ் எம்.குமார் 4,76,156 (45%) வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட டாக்டர். கிருஷ்ணசாமி 3,55,870 (33%) வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணனுக்கு 59,445 (6%) ஓட்டுகள் விழுந்தன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் தென்காசி தொகுதியின் மொத்த வாக்குகளில் 10.66,008 வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு சதவீதம் 70.7.
2024 தேர்தலில் களம் எப்படி உள்ளது?:தற்போது நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தென்காசி தொகுதியில் மொத்தமுள்ள 15, 25,439 வாக்குகளில் 10,58,987 வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 67. 57.
இந்தியா கூட்டணியில் இந்த முறையும் இங்கு திமுகவே களமிறங்கி உள்ளது. அக்கட்சியின் நீண்டகால உறுப்பினரும், அரசு மருத்துவருமான ராணி ஸ்ரீகுமார் திமுக சார்பில் போட்டியிடுகிறார். சங்கரன்கோவிலை சேர்ந்த இவரது கணவர் ஸ்ரீகுமார், திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிட்டுள்ளார். பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனும், நாம் தமிழர் கட்சி சார்பில் மதிவாணன் என்பவரும் போட்டியிட்டுள்ளனர். இவர்களுடன் சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 15 பேர் களத்தில் உள்ளனர்.