தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் 2024: 'மலைகளின் அரசி'யான நீலகிரிக்கு அரசராக போவது யார்? - NILGIRI Lok Sabha Election Result

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்த தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 8:25 PM IST

நீலகிரி தொகுதி வேட்பாளர்கள்
நீலகிரி தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit - ETV Bharat Tamil Nadu)

நீலகிரி:நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் தேயிலைத் தோட்டங்கள் அதிகம் உள்ளன. விவசாயிகளில் 50% பேர் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மலைப் பகுதிகளில் விலையும் காய்கறிகளை அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து விளைவித்து வருகின்றனர். மேலும் இங்கு சிறு, குறு விவசாயிகளும் அதிகம் உள்ளனர். சுற்றுலா மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்களும் தொகுதி மக்களின் பிரதான தொழிலாக உள்ளது.

மலைகளின் அரசி: 'மலைகளின் அரசி' என்ற சிறப்பை பெற்றுள்ளது நீலகிரி. இந்த மாவட்டத்தில் தான் இந்தியாவின் சிறந்த கோடை வாசஸ்தலமான உதகை அமைந்துள்ளது. நீலகிரி (தனி) மக்களவைத் தொகுதியானது உதகை, குன்னூர், கூடலூர்(தனி), மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் (தனி) ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது.

இதில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்டவை. மேட்டுப்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்திலும், அவினாசி திருப்பூர் மாவட்டத்திலும், பவானிசாகர் ஈரோடு மாவட்டத்திலும் உள்ளன.

வெளியூர் வேட்பாளர்கள்:நீலகிரி மக்களவைத் தொகுதிகுட்பட்ட மலை ப்பகுதியைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதிகளும், சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதிகளும் வெவ்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றன.

இத்தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று தொகுதிகள் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய சமவெளி மாவட்டங்களைச் சேர்ந்தவையாக உள்ளன. இந்த மூன்று தொகுதிகளில்தான் 60% வாக்காளர்கள் உள்ளனர். வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகச் சமவெளிப் பகுதி இருப்பதால், வெளியூர் வேட்பாளர்களே நீலகிரி தொகுதியில் அதிக அளவு போட்டியிடுகின்றனர். அத்துடன் அவர்கள் அதிக முறை வெற்றியும் பெற்றுள்ளனர்.

இம்முறையும் நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பாஜக வேட்பாளர் எல்.முருகன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

அதிக முறை வெற்றி பெற்ற கட்சிகள்: இத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் தான் அதிகம். 7 முறை காங்கிரஸ் இங்கு வெற்றி பெற்றுள்ளது. 1967ல் சுதந்திரா கட்சி, 1971, 2009, 2019 ஆகிய ஆண்டுகளில் திமுக, 1977, 2014 ஆகிய ஆண்டுகளில் அதிமுக ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. பாஜக இருமுறை வெற்றி கண்டுள்ளது. காங்கிரஸின் ஆர்.பிரபு ஐந்து முறை வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். திமுகவின் ஆ.ராசா மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். பாஜகவின் மாஸ்டர் மாதனும் மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். தற்போது நீலகிரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சர் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 தேர்தல்:2019ஆம் ஆண்டு நீலகிரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் 5,47,832. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தியாகராஜன் 3,42,009 வாக்குகள் பெற்ற தோல்வி அடைந்தார். மக்கள் நீதி மையம் 41,419 வாக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 40,419 வாக்குகளும் பெற்று மூன்று மற்றும் நான்காவது இடம் பிடித்தன. இத்தேர்தலில் மொத்தம் 9,92,570 வாக்குகள் பதிவாகி இருந்தன.

2024 தேர்தல்:நீலகிரி மக்களவைத் தொகுதியில் தற்போது மொத்தம் 14,20,514 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6,83,832, பெண் வாக்காளர்கள் 7,36,586 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 96 பேர். ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த தேர்தலில் மொத்தம் 70.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மோடியை கிண்டல் செய்த ஆ.ராசா:நீலகிரி தொகுதியில் திமுக சார்பாக ஆ.ராசா போட்டியிடுகிறார். இவர் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி, பவானிசாகர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, 15 லட்சம் ரூபாய்க்கான மாதிரி காசோலையைத் தயார் செய்து பொதுமக்கள் மத்தியில் காண்பித்து மோடியையும், ஒரு ஆட்டுக்குட்டிக்குக் கழுத்தில் மாலை அணிவித்து அண்ணாமலையையும் கிண்டல் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதி என்பது இல்லாமல், ஆ.ராசா தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் சபாநாயகரின் மகன்:அதிமுக சார்பாக இங்கு லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகரான தனபாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. உதகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் காரை, குன்னூர் அடுத்த காட்டேரி பகுதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக சார்பில் பெரிய ஆரவாரம் இல்லாமல் நீலகிரி தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது எனறே கூறலாம்.

எம்.பி. தேர்தலில் போட்டியிடும் எம்.பி.:பாஜக சார்பாக இங்கு எல்.முருகன் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட எல்.முருகனுக்கு, கடந்த மாதம் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் முன்னிலையில் பதவியேற்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஆதரவாகப் பிரதமர் நரேந்திர மோடி கோவைக்கு நேரடியாக வந்து பிரச்சாரம் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீலகிரியில் வெற்றி யாருக்கு?:நீலகிரி மக்களவைத் தொகுதி நட்சத்திர தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. இங்கு முன்னாள் மத்திய அமைச்சரான திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ள பாஜக வேட்பாளர் எல்.முருகன் இடையே கடும் போட்டி நிலவுவது போல் பிம்பம் இருந்தாலும், கடந்த முறை அதிமுக 3 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்ததை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, நீலகிரியை நிலவும் மும்முனைப் போட்டியில் மலைகளின் அரசி என்ற சிறப்பை பெற்ற தொகுதிக்கு அரசராக போவது யார் என்பது ஜுன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.

இதையும் படிங்க:LOKSABHA ELECTION RESULT - 2024

ABOUT THE AUTHOR

...view details