ஈரோடு:ஈரோடு மாவட்டம் விசைத்தறிகள், ஜவுளித் துறை மற்றும் மஞ்சள் விவசாயத்தில் சிறந்த விளங்குகிறது. மேலும் இங்கு நீர் ஆதாரமாகக் காவிரி ஆறு, கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் கால்வாய்கள் உள்ளன. ஜல்லிக்கட்டு காளைகளுக்குப் பெயர் பெற்ற காங்கேயமும், காற்றாலைகள், கண்வலிகிழங்கு மற்றும் முருங்கை பவுடர் உற்பத்தியில் தமிழகத்தின் முன்னணி ஊராக திகழும் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகள் ஈரோடு மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளன. திராவிட இயக்கம் தோன்றுவதற்கு காரணமான பெரியார் பிறந்த ஊர் என்ற பெருமையும் ஈரோட்டுக்கு உண்டு.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி ஈரோடு கிழக்கு , ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குமாரபாளையம், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கேயம், தாராபுரம் (தனி) என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முன்பு திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியாக இருந்து தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு, 2009ஆம் ஆண்டு முதல் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியாக உள்ளது.
2019 தேர்தல் வாக்குப்பதிவு விபரம்:2019 மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் மொத்தம் 10,53,068 வாக்குகள் பதிவாகின. திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி 5,63,591 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மணிமாறன் 3,52,973 வாக்குகளும் பெற்றனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரவணக்குமார் 47,719 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி 39,010 வாக்குகளும் வாங்கினர். இதில், மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, அதிமுக வேட்பாளரான மணிமாறனை விட 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2024 தேர்தல் வாக்குப்பதிவு விபரம்:ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2,30,448 வாக்காளர்களும், ஈரோடு மேற்கு தொகுதியில் 2,95,732 வாக்காளர்களும், மொடக்குறிச்சி தொகுதியில் 2,27,935 வாக்காளர்களும், தாராபுரம் தொகுதியில் 2,58,786 வாக்காளர்களும், காங்கேயம் தொகுதியில் 2,59,652 வாக்காளர்களும், குமாரபாளையத்தில் 2,55,689 வாக்காளர்களும் உள்ளனர்.
மொத்தமாக தற்போது, ரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 7,44,927 ஆண் வாக்காளர்களும், 7,93,667 பெண் வாக்காளர்களும், 184 மூன்றாம் வாக்காளர்களும் என மொத்தம் 15,38,778 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 10,86,287 பேர் வாக்கு செலுத்தி உள்ளனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 70.59.
கள நிலவரம் என்ன?:ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவும், திமுகவும் சமபலத்துடன் உள்ளன. மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வென்ற மொடக்குறிச்சி தொகுதியும் ஈரோடு மக்களவைத் தொகுதியில் தான் உள்ளது. தமிழகத்திலேயே அதிக பணம் மற்றும் சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனு தாக்கலின்போது தெரிவித்திருந்த அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடும் தொகுதியாகவும் ஈரோடு உள்ளது.