தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 67.52 விழுக்காடும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.04 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024 வாக்குப்பதிவு: தமிழ்நாடு, புதுச்சேரி முக்கிய விவரங்கள்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 19, 2024, 6:15 AM IST
|Updated : Apr 19, 2024, 7:02 PM IST
17:57 April 19
5 மணி வரை 63.20% விழுக்காடு வாக்குப்பதிவு!
16:26 April 19
ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் வாக்களிப்பு!
மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் ஒன்றாக வந்து வாக்கு செலுத்தினர்
15:40 April 19
3 மணி நிலவரப்படி 51.41% வாக்குப்பதிவு!
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.41 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.
15:22 April 19
நடிகர் வடிவேலு வாக்களிப்பு!
சென்னை விருகம்பாக்கம் காவேரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் வடிவேலு வாக்களித்தார்
15:17 April 19
வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயக கடமையை செய்யுங்கள்:
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன், நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
14:19 April 19
ஆளுநர் ஆர்.என்.ரவி வாக்களிப்பு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் கிண்டியில் உள்ள அட்வெண்ட் கிறிஸ்துவ நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
13:53 April 19
விளவங்கோட்டில் 35.14% வாக்குப்பதிவு!
கன்னியாகுரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் மதியம் 1.00 மணி நிலவரப்படி, 35.14 சதவிகிதம் வாக்குப்பதிவு
13:49 April 19
மதியம் 1.00 மணிநிலவரப்படி 40.05% வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் மதியம் 1.00 மணி நிலவரப்படி, 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
13:22 April 19
முதலில் வந்த பெண்ணுக்கு பரிவட்ட வரவேற்பு!
தருமபுரி சாலை விநாயகர் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதலாவதாக வாக்களிக்க வந்த பெண்ணுக்கு வருவாய் கோட்டாட்சியர் பால் பிரின்சிலி ராஜ்குமார் பரிவட்டம் கட்டி வரவேற்பு அளித்தார்
13:14 April 19
தாய் உடன் வந்து வாக்களித்த திருமாவளவன்!
விசிக தலைவரும், சிதம்பரம் வேட்பாளருமான திருமாவளவன் அங்கனூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது தாயார் உடன் வந்து வாக்களித்தார்.
13:09 April 19
குடும்பத்தோடு வந்து வாக்களித்த பிரேமலதா!
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மகன்களுடன் வந்து வாக்களித்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
13:06 April 19
புதுச்சேரியில் 28.10 விழுக்காடு வாக்குப்பதிவு!
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பிற்பகல் 12 மணி நிலவரப்படி 28.10 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்
12:38 April 19
நடிகர் விஜய் வாக்களித்தார்
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார்.
12:35 April 19
ஆளுநர் ஆர்.என்.ரவி வாக்களிப்பு!
சென்னை வேளச்சேரியில் உள்ள அட்வெண்ட் கிறித்துவ நடுநிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
12:29 April 19
நடிகர் விஜய் வாக்களிக்க வருகை!
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய்
12:19 April 19
80 பேருக்கு வாக்கு இல்லை என புகார்!
தேனி போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உப்புக்கோட்டை கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு வாக்கு இல்லை என புகார் தெரிவித்து வாக்குச்சாவடியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
11:49 April 19
11 மணிநிலவரப்படி 24.37% வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தகவல்
11:47 April 19
விளவங்கோட்டில் 17.09% வாக்குப்பதிவு!
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 17.09 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்
11:29 April 19
வாக்குச்சாவடியில் இரு முதியவர்கள் உயிரிழப்பு!
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் உள்ள கொண்டையம்பள்ளி பகுதியில் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு (77) வெயில் தாங்காமல் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். அதேபோல், சேலம் பழைய சூரமங்கலம் வாக்குச் சாவடியில் முதியவர் ஒருவர் வெயிலின் தாக்கம் தாங்காமல் மயக்கம் அடைந்து கீழே விழுந்த நிலையில் உயிரிழந்தார்.
11:19 April 19
நெல்லையில் 12 வாக்குகள் மட்டுமே பதிவு!
நெல்லை அலவந்தான் குளத்தில் தேர்தல் புறக்கணிப்பு காரணமாக வாக்குப்பதிவு தொடங்கி சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாகியும் வெறும் 12 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது
10:58 April 19
நடிகை த்ரிஷா வாக்களிப்பு
நடிகை த்ரிஷா சென்னை டிடிகே சாலை பகுதியில் உள்ள புனித சேவியர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்
10:54 April 19
கவிஞர் வைரமுத்து வாக்களிப்பு!
கவிஞர் வைரமுத்து ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
10:37 April 19
பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர்!
புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி தனது RX100 பைக்கில் வந்து வாக்களித்தார்
10:27 April 19
விளவங்கோட்டில் 10.85% வாக்குப்பதிவு!
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.85 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்
10:23 April 19
வாக்களித்த உலக நாயகன்!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிக முக்கியமானது எனக் கூறினார்.
10:22 April 19
சென்குன்றத்தில் வாக்கு இயந்திரம் பழுது!
செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 287ல் ஒரு மணி நேரம் வாக்கு எந்திரம் பழுதானதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
10:20 April 19
திமுக எம்பி கனிமொழி வாக்களிப்பு
சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி கருணாநிதி, அவரது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் வந்து வாக்களித்தார்
09:53 April 19
வாக்குச்சாவடியில் செல்போனுக்கு கெடுபிடி!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாக்குச்சாவடிகளுக்குள் செல்போனுடன் செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் வாக்காளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். செல்ஃபி பூத் வைக்கப்பட்டுள்ள நிலையில் செல்போனுக்கு அனுமதி மறுப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
09:51 April 19
வேங்கைவயலில் தேர்தல் புறக்கணிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இதுவரை அங்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை, அதிகாரிகள் வாக்காளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
09:50 April 19
ஏக்னாபுரத்தில் வாக்குப்பதிவு மந்தம்
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் ஏக்னாபுரம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இதுவரை 9 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தகவல்
09:35 April 19
9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்
09:20 April 19
அமைச்சர் துரைமுருகன் வாக்களிப்பு
காட்பாடி காந்திநகர் 155-ஆவது வார்டில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
09:16 April 19
சென்னையில் எல்.முருகன் வாக்களிப்பு
சென்னை கோயம்பேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மத்திய இணை அமைச்சரும், நீலகிரி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
09:10 April 19
புதுச்சேரி பாஜக வேட்பாளர் வாக்களிப்பு!
புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் மனவெளியில் அமைக்கப்பட்டுள்ள அரசு தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
08:46 April 19
மதுரையில் சு.வெங்கடேசன் வாக்களிப்பு
மதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட ஹார்வி பட்டியில் உள்ள சுவாமி விவேகானந்தா வித்யா மந்திர் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
08:44 April 19
தங்க தமிழ்ச்செல்வன் வாக்களிப்பு
தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவரது சொந்த ஊரான நாராயணன்தேவன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
08:44 April 19
கரூரில் ஜோதிமணி வாக்களிப்பு!
கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, பெரிய திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
08:42 April 19
பாமக வேட்பாளர் திலகபாமா வாக்களிப்பு
திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனது வாக்கை பதிவு செய்தார்
08:37 April 19
பாஜக வேட்பாளர் அண்ணாமலை சவால்!
தமிழக பாஜக தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான கே.அண்ணாமலை அரவக்குறிச்சியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு பாஜக பணம் கொடுத்ததாக கூறும் திமுக அதனை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என சவால் விடுத்துள்ளார்.
08:33 April 19
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களிப்பு
சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வாக்களித்தார்.
08:31 April 19
நடிகர் ரஜினிகாந்த் வாக்களிப்பு
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்
08:11 April 19
எடப்பாடி பழனிசாமி வாக்களிப்பு
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்காளித்தார்
08:06 April 19
புதுச்சேரியில் 12% வாக்குப்பதிவு
புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணிநேரத்தில் 12 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்
07:56 April 19
திருச்சியில் அமைச்சர்கள் வாக்களிப்பு
திருச்சியில் தில்லைநகர் வாக்குச்சாவடியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்கினை பதிவு செய்தார். கிராப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்களித்தார்
07:52 April 19
வாக்கு எந்திரம் கோளாறு - காத்திருக்கும் வேட்பாளர்
சென்னை அண்ணாநகர் கந்தசாமி கலைக்கல்லூர வாக்குச்சாவடியில் மின்னணு எந்திரத்தில் கோளாறு - திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி குடும்பத்துடன் காத்திருப்பு
07:44 April 19
வாக்குச்சாவடிகளுக்கு செல்ல இலவச பேருந்து வசதி
முதியோர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல, பொதுப்போக்குவரத்து சேவைகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
07:43 April 19
உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் எப்படி இருக்கு?
வாக்குச்சாவடிகளில் வரிசையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை ஆன்லைனில் அறிந்து கொள்ளும் வசதி. https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
07:41 April 19
வாக்களித்தார் பொன் ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருண்ணன் நாகர்கோவில் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
07:30 April 19
பெரம்பலூர் துறைமங்கலத்தில் வாக்குப்பதிவு தாமதம்
நேஷனல் ஐடிஐ -இல் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு. வாக்குப்பதிவு தாமதமாகி வருகிறது.
07:24 April 19
பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களிப்பு
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் பாஜக தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்
07:15 April 19
கோவை அதிமுக வேட்பாளர் வாக்களிப்பு
கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
07:14 April 19
செளமியா அன்புமணி வாக்களிப்பு!
தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி திண்டிவனம் மரகதாம்பிகை அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
07:11 April 19
கோவை திமுக வேட்பாளர் வாக்களிப்பு
கோயம்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தனது வாக்கினை பதிவு செய்தார்
07:10 April 19
ஓட்டு போட்ட நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
07:05 April 19
வாக்குப்பதிவு தொடங்கியது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது
06:51 April 19
மதுரையில் மாதிரி வாக்குப்பதிவு
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் துவரிமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 6:10 மணியளவில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
06:45 April 19
ஓட்டு போட முதல் நபராக வந்த நடிகர் அஜித்!
சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை பதிவு செய்ய முதல் நபராக நடிகர் அஜித்குமார் வருகைத் தந்து வரிசையில் காத்திருக்கிறார்.
06:40 April 19
மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது.
06:13 April 19
கரூரில் 54 பேர் போட்டி
தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மக்களவைத் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 9 வேட்பாளர்களும் களம் காண்கின்றனர்
06:13 April 19
தமிழகத்தில் 950 வேட்பாளர்கள்
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரி தொகுதியில் 26 பேரும் களத்தில் உள்ளனர்.
06:05 April 19
நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு
தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது