சென்னை:அண்மையில் நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலல், தென்சென்னை தொகுதியில் பதிவான 4079 தபால் வாக்குகளில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 1454 வாக்குகளும், தமிழச்சி தங்கப்பாண்டியன் 1321 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் 383 வாக்குகளையும் பெற்றனர். பாஜகவிற்கு அரசு ஊழியர்கள் இந்த தொகுதியில் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களாக சோழிங்கநல்லூரில் அரவிந்த் ரமேஷ், மயிலாப்பூர் தா.வேலு, தியாகராய நகர் கருணாநிதி, சைதாப்பேட்டை மா.சுப்பிரமணியன், விருகம்பாக்கம் பிரபாகர்ராஜா ஆகியோரும், வேளச்சேரியில் காங்கிரஸ் ஹசன் மவுலானா உள்ளனர். திமுக கூட்டணி கடந்த 2019ம் ஆண்டில் 5 லட்சத்து 64 ஆயிரத்து 872 வாக்குகள் பெற்ற நிலையில், 2024ல் 5 லட்சத்து 16 ஆயிரத்து 628 வாக்குகளை பெற்றுள்ளது.
தென்சென்னை தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்டார். அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜெயவர்த்தனும், பாஜக கூட்டணியின் சார்பில் தெலங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினமா செய்துவிட்டு, தேர்தலில் போட்டியிட்டார்.
பாஜகவில் மீண்டும் இணைந்தது முதல் தென்சென்னை தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக கூட்டணியில் இருந்த அமமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளையும் அரவணைத்துச் சென்றார். மேலும் தென்சென்னை மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து தனியாக தேர்தல் அறிக்கையும் தயார் செய்து வெளியிட்டார். பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்தப்போது, 'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்' என முழுக்கமிட்டு மக்களிடம் நன்கு அறிமுகம் ஆனவர் தமிழிசை.
இதன் காரணமாக அவர் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 81,555 வாக்குகளும், வேளச்சேரி தொகுதியில் 51 ஆயிரத்து 353 வாக்குகளும், விருகம்பாக்கம் தொகுதியில் 43 ஆயிரத்து 528 வாக்குகளும், மயிலாப்பூர் தொகுதியில் 38 ஆயிரத்து 944 வாக்குகளும், தியாகராய நகர் தொகுதியில் 45 ஆயிரத்து 206 வாக்குகளும், சைதாப்பேட்டை தொகுதியில் 28 ஆயிரத்து 643 வாக்குகளும் என 2 லட்சத்து 90 ஆயிரத்து 683 வாக்குளை பெற்றுள்ளார்.
கடந்தாண்டு இறுதியில் சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ,பள்ளிக்கரணை பகுதிகள் நீரில் முழ்கின. இதற்கு ஆட்சியாளர்கள் சரியாக நடவடிக்கை எடுக்காதது தான் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதுவும் தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகளுக்கு காரணமாக இருந்துள்ளது.
அதே நேரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெயவர்த்தன் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டபோதும், அவர் 172491 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் காரணமாக அதிமுகவின் வாக்கு சதவீதம் 15.69 என்ற நிலைக்கு சென்றுள்ளது.
திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதியில் பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் மழை, வெள்ளத்தின்போது நீங்கள் ஏன் வரவில்லை என கேள்வியை பரவலாக பொதுமக்கள் எழுப்பினர். அந்த அளவுக்கு தொகுதியில் அதிருப்தி குரல் இருக்க தான் செய்தது. ஆனாலும் கட்சி நிர்வாகிகளின் தீவிர களப்பணி மற்றும் கூட்டணி பலத்தால் தென்சென்னையில் திமுக வெற்றி பெற்றுள்ளது.