கோவை:கோவையில் தேர்நிலை திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் இந்தியா கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், 'பாஜக ஆளும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்தியாவின் அரசியல் சாசனம் என்பது சாதி மதம் மற்றும் இனங்களுக்கு அப்பாற்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பாஜக அதை மாற்றுவதற்காக துடித்துக் கொண்டிருக்கிறது.
மின்சார உற்பத்தி, மின்விநியோகம், வங்கிகள், ரயில்வே, விமான சேவை என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் ஒழிப்பதற்கு பாஜக தயாராக உள்ளது. தண்ணீர் கட்டணம், மின்சார கட்டணம் போக்குவரத்து என எல்லா செலவுகளும், லாபம் மட்டுமே இலக்காக கொண்டிருக்கும் தனியாருக்கு கொடுப்பதன் மூலம் பன்மடங்கு அதிகரிக்கும். அதனால்தான், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை வலுப்படுத்துவதற்கான திட்டங்களைக் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியளித்தனர்.
இந்தியா கூட்டணி என்பது ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல. கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதற்காகவும் தான். எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசின் உரிமைகளில் செயல்பாடுகளில் தினமும் தலையிடுகிறார்கள். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர்கள் பிரிட்டிஷ் காலத்தில் இருந்த வைசிராய் போல செயல்படுகிறார்கள். இன்னொரு பக்கம் கல்வியில் தலையிடுகிறார்கள்.