தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளிய பாஜக! - இரட்டை இலையின் வாக்கு வங்கி சரிந்தது ஏன்? - Madurai constituency Admk vote bank - MADURAI CONSTITUENCY ADMK VOTE BANK

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியை திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீண்டும் கைப்பற்றி உள்ளது. இத்தொகுதிக்கு உட்பட்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவை பாஜக பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது எப்படி? அதிமுகவின் வாக்கு வங்கி சரிவுக்கான காரணங்கள் என்ன? என்பவை குறித்த விவரிக்கிறது இக்கட்டுரை.

மதுரை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் டாக்டர்.சரவணன்(அதிமுக), ராம.சீனிவாசன் (பாஜக)
மதுரை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் டாக்டர். சரவணன்(அதிமுக), ராம.சீனிவாசன் (பாஜக) (Image Credit - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 5:32 PM IST

மதுரை:மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின்போது முதல் ஐந்து சுற்றுகள் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக இடையே போட்டி நிலவியதாக வாக்கு எண்ணிக்கை நிலவரம் இருந்து வந்தது. அதற்குப் பிறகான சுற்றுகளில் பாஜக, அதிமுகவைப் பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை நோக்கி முன்னேறியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடத்தை பிடித்தது. மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியைவிட வெறும் 3,710 வாக்குகளையே பாஜக குறைவாகப் பெற்றது. தமிழ்நாட்டில் ஒற்றை இலக்க வாக்கு சதவீதத்தை வைத்திருந்த பாஜக, இத்தேர்தலில் தமது வாக்கு வங்கியை இரட்டை இலக்கத்துக்கு உயர்த்தி, தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிவாரியாக, பல்வேறு கட்சிகள் பெற்ற வாக்குகள் விபரம்:

மேலூர் சட்டமன்றத் தொகுதி

பதிவான மொத்த வாக்குகள் - 1,67,875

திமுக கூட்டணி (மார்க்சிஸ்ட்) - 69,258
அதிமுக கூட்டணி (அதிமுக) - 39,123
பாஜக கூட்டணி (பாஜக) - 35,952
நாதக - 19,968

வாக்கு வித்தியாசம் - 33,306 (-அதிமுக)

மேலூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக இரண்டாம் இடத்தை பெற்றாலும், மூன்றாம் இடம்பிடித்த பாஜகவைவிட கூடுதலாக வெறும் 3,171 வாக்குகளையே பெற்றிருந்தது. இது முழுவதும் கிராமப்புறம் சார்ந்த சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவைச் சேர்ந்த பெரியபுள்ளான் ஆவார். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளரை, 35,162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார். 2001-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 6 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக-வின் கோட்டையாக மேலூர் சட்டமன்றத் தொகுதி திகழ்கிறது.

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி

பதிவான மொத்த வாக்குகள் - 2,28,999

திமுக கூட்டணி (மார்க்சிஸ்ட்) - 1,15,201
பாஜக கூட்டணி (பாஜக) - 43,120
அதிமுக கூட்டணி (அதிமுக) - 39,499
நாதக - 22,712

வித்தியாசம் - 72,081 (பாஜக)

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை பாஜக 2-ஆம் இடம் பெற்றாலும் 3-ஆம் இடம் பெற்ற அதிமுகவைவிட 3,621 வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. இது நகர் மற்றும் கிராமப்புறம் சார்ந்த தொகுதியாகும். தமிழக வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுகவின் கோபாலகிருஷ்ணனை 49,604 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். கடந்த 2001, 2006 சட்டமன்றத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 2011-ஆம் ஆண்டு அதிமுகவும், 2016, 2021 ஆகிய தேர்தல்களில் திமுகவும் வென்றுள்ளன. தற்போது நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை விட 3,621 வாக்குகளை பாஜக கூடுதலாகப் பெற்றுள்ளது. இக்குறிப்பிட்ட தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். தெலுங்கு பேசும் மக்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி

பதிவான மொத்த வாக்குகள் - 1,40,530

திமுக கூட்டணி (மார்க்சிஸ்ட்) - 59,955
அதிமுக கூட்டணி (அதிமுக) - 30,681
பாஜக கூட்டணி (பாஜக) - 30,218
நாதக - 13,890

வித்தியாசம் - 29,737 (-அதிமுக)

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, 2-ஆம் இடம் பெற்றுள்ள அதிமுக, 3-ஆம் இடம்பெற்ற பாஜகவைவிட 463 வாக்குகளே கூடுதலாகப் பெற்றுள்ளது. பெரும்பாலும் நகர்ப்புற மக்களைக் கொண்ட தொகுதி. கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவும், 2021 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவும் வென்றுள்ளது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய அதிமுக வேட்பாளர் சரவணன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் இங்கு பாஜக சார்பாகப் போட்டியிட்டார். அப்போது அவர் பெற்ற வாக்குகள் 50,094. திமுக வேட்பாளர் கோ.தளபதியைவிட 22,916 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியைத் தழுவினார். இந்தத் தொகுதியில் முக்குலத்தோர் அதிகமாக உள்ளனர்.

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி

பதிவான மொத்த வாக்குகள் - 1,30,446

திமுக கூட்டணி (மார்க்சிஸ்ட்) - 45,783
பாஜக கூட்டணி (பாஜக) - 42,073
அதிமுக கூட்டணி (அதிமுக) - 26,810
நாதக - 10,522

வித்தியாசம் - 3,710 (-பாஜக)

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை 2-ஆம் இடம் பெற்ற பாஜக, தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுகவைவிட கூடுதலாக 15,263 வாக்குகளைப் பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் கட்சியும், 2016-இல் அதிமுகவும் இத்தொகுதியில் வென்றுள்ளன. 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக இந்தத் தொகுதியைக் கைப்பற்றியது. அதிமுக வேட்பாளரைவிட 6,515 வாக்குகள் மட்டுமே மதிமுக கூடுதலாகப் பெற்றது.ஆனால் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2-ஆம் இடம்பெற்ற பாஜக, அதிமுகவைவிட 15,263 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் கணிசமான எண்ணிக்கையில் சௌராஷ்ட்ர சமூக மக்கள் உள்ளனர். வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் இச்சமூகத்தினர் முக்கியப் பங்கு வகிப்பதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக பாஜக இத்தொகுதியில் செல்வாக்குப் பெற்று வருகிறது.

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி

பதிவான மொத்த வாக்குகள் - 1,32,537

திமுக கூட்டணி (மார்க்சிஸ்ட்) - 63,516
பாஜக கூட்டணி (பாஜக) - 28,864
அதிமுக கூட்டணி (அதிமுக) - 24,903
நாதக - 10,253

வித்தியாசம் 34,652 (பாஜக)

முழுவதும் நகர்ப்புற மக்களைக் கொண்ட மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் 2-ஆம் இடம் பெற்ற பாஜக, அதிமுகவைவிட 3,961 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. இதுவரை இந்தத் தொகுதி திமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது. 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவே இந்தத் தொகுதியில் வென்றுள்ளது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதியாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 34,176 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சார்பு வேட்பாளர் தோல்வியடைந்தார். அனைத்து சமூக மக்கள் கலந்து வாழக்கூடிய பகுதி. இஸ்லாமியர்களும், சௌராஷ்ட்ர சமூக மக்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனர்.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி

பதிவான மொத்த வாக்குகள் - 1,81,236

திமுக கூட்டணி (மார்க்சிஸ்ட்) - 74,488
அதிமுக கூட்டணி (அதிமுக) - 43,147
பாஜக கூட்டணி (பாஜக) - 38,808
நாதக - 18,041

வித்தியாசம் 38,808 (அதிமுக)

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை நகர் மற்றும் கிராமப்புற வாக்காளர்களைக் கொண்டதாகும். அதிமுகவின் கோட்டையாக உள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2-ஆம் இடம் பெற்ற அதிமுக, 3-ஆம் இடம் பெற்ற பாஜகவைவிட 4,339 வாக்குகளையே கூடுதலாகப் பெற்றுள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ந்து 3-ஆவது முறையாக வென்றுள்ள தொகுதியாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாகப் போட்டியிட்ட சின்னம்மாளைவிட 9,121 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.

அஞ்சல் வாக்குகள்

பதிவான மொத்த வாக்குகள் - 6,593

திமுக கூட்டணி (மார்க்சிஸ்ட்) - 2,122
பாஜக கூட்டணி (பாஜக) - 1,879
அதிமுக கூட்டணி (அதிமுக) - 641
நாதக - 493

வித்தியாசம் 243 (பாஜக)

மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான அஞ்சல் வாக்குகளிலும்கூட 2-ஆம் இடம் பெற்றுள்ள பாஜக, தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுகவைவிட 1,238 வாக்குகளை கூடுதலாகப் பெற்றுள்ளது.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை பதிவான 9,86,969 மொத்த வாக்குகளில் திமுக கூட்டணிக் கட்சியான சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் 4,30,323 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் 2,20,914 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சரவணன் 2,04,804 வாக்குகளும் பெற்றுள்ளனர். பாஜக, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் சுமார் 16 ஆயிரம் மட்டுமே.

அதிமுகவின் சரிந்த வாக்கு வங்கி:கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடுகையில், அதிமுக தனது வாக்கு வங்கியில் பெருமளவில் சரிவைச் சந்தித்துள்ளது. வலுவான கூட்டணி அமையாதது, ஓபிஎஸ் தனித்து செயல்படுவது, பரப்புரை வலிமையின்மை போன்றவை அதிமுகவின் இச்சரிவுக்கு முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, பொதுவாகவே நாடாளுமன்றத் தேர்தல்களில் தேசியக் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கின்ற வாக்காளர்களின் பொது மனநிலை மற்றொரு காரணமாக கருதப்படுகிறது. இதற்கிடையே பாஜக மதுரை மாவட்டம் முழுவதும் தனது உட்கட்சிக் கட்டமைப்பிலும், விரிவாக்கத்திலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக அக்கட்சியின் வாக்கு விழுக்காடு அதிகரித்துள்ளது. கூடுதலாக டிடிவி தினகரன், ஓபிஎஸ் கூட்டணியில் இணைந்தது முக்குலத்தோர் வாக்குகளைக் கவர ஏதுவாக அமைந்துவிட்டது.

முதலிடம்?:இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போது வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை 10.5 விழுக்காடாக அறிவித்தது, மதுரையில் எங்களது வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவுக்கு முக்கிய காரணம். அதுமட்டுமன்றி பாஜக தொடர்ந்து ஒவ்வொரு சாதிகளோடு தன்னை பிணைத்துக் கொண்டு தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டது. பாஜகவுடன் இணைந்த பாமக உள்ளிட்ட கட்சிகள் எங்களோடு கூட்டணியில் இணைந்திருந்தால், அப்போது பாஜகவின் நிலை என்ன என்பது தெரிந்திருக்கும்.

தமிழ்நாடு முழுவதும் பரவலாக கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட அதிமுக தனது வாக்கு பலத்தை அதிகரித்திருக்கிறது. திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குபலத்தை தனித்தனியாக மதிப்பிட்டு, அதிமுகவோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதும் இங்குள்ள அனைத்துக் கட்சிகளை விட அதிமுகவின் வாக்கு பலமே முதலிடத்தில் இருக்கும். இனி வருங்காலங்களில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் சரிவுக்குள்ளான வாக்குகளை எவ்வாறு நேர் செய்ய முடியும் என்பது அனுபவமுள்ள எங்களின் கட்சிக்குத் தெரியும். அதனை எடப்பாடி பழனிசாமி தலைமையில் திட்டமிட்டு நாங்கள் செய்வோம். இழந்த வாக்குகளை மீட்போம்" என்றார் அவர்.

இதையும் படிங்க:ஈவிகேஎஸ் இளங்கோவன் Vs செல்வப்பெருந்தகை - காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details