சேலம்:சேலம், வீரபாண்டி அருகே அரியானூர் பகுதியில் அரசு சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், இந்த கல்லூரியில் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (பிப்.29) வழக்கம் போல விடுதியில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்பொழுது, ஒரு மாணவியின் தட்டில் உணவுடன் பல்லி இருந்துள்ளது. இந்த உணவை உட்கொண்ட மாணவி ஒருவர் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து, அந்த மாணவி ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில், சட்டக் கல்லூரி நிர்வாகம் உடனடியாக அந்த மாணவியை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரைத் தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மாணவிகள் அனைவருக்கும் கல்லூரி வளாகத்திலேயே சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த விடுதியில் சுகாதாரமற்ற உணவுகள் வழங்குவதாக புகார் எழுந்த நிலையில், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நோட்டீஸ் வழங்கியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று (பிப்.29) மீண்டும் உணவில் பல்லி இருந்த சம்பவத்தால் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் தலைமையிலான குழுவினர் சட்டக் கல்லூரியிலுள்ள விடுதியை ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:ஏர் பிரான்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு; நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 324 பேர்!