சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்.19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும்.வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 -ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு மார்ச் 20ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதிவரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி கடந்த வாரம் தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. ஆனால் வேட்பு மனு தொடங்கிய முதல் நாள் பலரும் மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. முதல் நாளில் 22 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்து இருந்த நிலையில் அதற்கு அடுத்த நாள் (மார்ச் 21) 9 பேர், மார்ச் 22ஆம் தேதி 47 என முதல் மூன்று நாட்களில் 78 வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை தினம் என்பதால் மனு தாக்கல் நடைபெறவில்லை. இந்தநிலையில் நேற்று(மார்ச் 25) ஒரே நாளில் மட்டும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 405 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையம் ஆணையம் அறிவித்துள்ளது.