மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இதனை அடுத்து, சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து ஐந்து நாட்களாக தேடியும் சிறுத்தை கிடைக்காததால், ஆறாவது நாளாக மயிலாடுதுறை அடுத்த 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குத்தாலம் தாலுகா காஞ்சிவாய் என்ற கிராமத்தில் சிறுத்தை தென்பட்டதாக, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு முகாமிட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் எல்லைப் பகுதியான காஞ்சிவாய் பகுதி நண்டலாறு, வீரசோழன் ஆறு ஆகிய பகுதிகளில் சிறுத்தையின் கால் தடம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மசினகுடியில் டி23 புலியை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன் மற்றும் காளன் ஆகியோர் காஞ்சிவாய் பகுதியில் முகாமிட்டு சிறுத்தையைத் தேடி வருகின்றனர்.
இதனிடையே காஞ்சிவாய், பேராவூர், கருப்பூர் ஆகிய கிராமங்களைச் சுற்றியும், அப்பகுதியில் உள்ள நண்டலாறு மற்றும் அதன் இருபக்க கரைகளிலும் சென்சார் கேமராக்கள், தெர்மல் ட்ரோன் கேமரா பொருத்தியும், 16 கூண்டுகள் வைத்தும் உயிருடன் ஆடு, பன்றிகள் மற்றும் இறைச்சிகளைக் கூண்டுகளில் வைத்தும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், கோயம்புத்தூரில் இருந்து WWF - INDIA நிபுணர் குழு 30 கேமரா ட்ராப்புகளுடன் களத்தில் பணியைத் தொடங்கி உள்ளனர். இருப்பினும், சிறுத்தையைப் பிடிக்க வைக்கப்பட்டுள்ள 16 கூண்டுகளிலும் சிறுத்தை சிக்கவில்லை.