வேலூர்: குடியாத்தம் அருகே சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால், மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை பிடிக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் சமீப காலங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து ஆடு, மாடு மற்றும் கோழிகளை சிறுத்தை தாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சிறுத்தை தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை பிடிப்பதற்கு வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று குடியாத்தம் அடுத்த காளியம்மன் பட்டி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறுத்தையை பிடிக்கும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை என காளியம்மன் பட்டி குடியிருப்பு பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.
வேலூர் குடியாத்தம் அடுத்த காளியம்மன் பட்டி சாமியார் மலைப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பள்ளி இருக்கும் பகுதிக்கு அருகாமையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளன.
இதனால், சிறுத்தை பிடிக்கும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை என காளியம்மன் பட்டி பகுதி மக்கள் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் வனத்துறையினர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதில், குடியிருப்புகள் புகுந்த சிறுத்தையை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உறுதி அளித்துள்ளனர். இதனையடுத்து, பெற்றோர்கள் கலைந்துச் சென்றனர்.