தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே ஜம்ப்..! அரியலூர் அருகே செந்துறை அரசு மருத்துவமனையில் சுவரைத் தாவிக் குதித்த சிறுத்தை.. சிசிடிவி வைரல் - Leopard movement in Ariyalur - LEOPARD MOVEMENT IN ARIYALUR

Leopard movement in Ariyalur: அரியலூர் மாவட்டம், செந்துறையில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leopard movement in Ariyalur
அரியலூரில் சிறுத்தை நடமாட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 10:18 AM IST

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம்

அரியலூர்: மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்க, கடந்த 9 நாட்களாக வனத்துறை அதிகாரிகள் கூண்டுகளை வைத்தும், தெர்மல் ட்ரோன் கேமரா உதவியுடனும் சிறுத்தையை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

நேற்று முன்தினம் மயிலாடுதுறை நகர் அருகே நல்லத்துக்குடி ஊராட்சியில், சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், திருவாரூர் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு, சிறுத்தையின் கால் தடம் குறித்து ஆய்வு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, நேற்று நல்லத்துக்குடி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து, டி23 சிறுத்தையை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன், காளன் உள்ளிட்ட குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். இதில், அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடயங்கள் உறுதி செய்யப்படவில்லை. கடந்த ஏப்ரல் 8ஆம் தேதிக்கு பிறகு சிறுத்தையின் தடயங்கள் எதுவும் கிடைக்காததால் தொடர்ந்து பொதுமக்கள் அளிக்கும் தகவலின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியில், 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு முந்திரிக்காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில், அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு, சிறுத்தையின் கால் தடம் குறித்து விசாரணை செய்தனர்.

மருத்துவமனை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்:இந்த நிலையில், நேற்று நள்ளிரவு ஆட்கள் நடமாட்டம் மிகுந்த செந்துறை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த புண்ணியகொடி என்பவர் தெரிவித்துள்ளார். அதன் பேரில், வனத்துறைக்கு கிராமமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த செந்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனை வளாகத்தை சுற்றி வளைத்து, சிறுத்தையைத் தேடினர்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை:இதனால், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சிறுத்தை என்பதை உறுதி செய்தனர். இதனால், கிராமமக்களின் பாதுகாப்பு கருதி செந்துறை போலீசார், ஒலிபெருக்கியின்‌ மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், கிராமமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் இதுகுறித்து, மயிலாடுதுறையில் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட சிறப்பு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தெர்மல் ட்ரோன் கேமரா மூலமாக சிறுத்தை இருக்கும் இடத்தை கண்காணித்தனர். ஆனால், சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

தேடும் பணி தீவிரம்:அரியலூர், செந்துறை அருகே சிறுத்தையின் நடமாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன், “அரியலூர், பொன்பரப்பி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தோம். ஆனால், அங்கு கால் தடயங்கள் தெளிவாகக் கிடைக்காத நிலையில், இரண்டு பிரிவாகப் பிரிந்து அருகில் உள்ள காடுகளில் தேடுதல் பணி மேற்கொண்டோம்.

இந்த நிலையில், செந்துறை அரசு மருத்துவமனையில் 9 மணி அளவில் சிறுத்தை வேலியை தாண்டிப் போனதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில், வனத்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா ஆய்வு செய்தனர். அதில், சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, 11 மணி அளவில் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், அவரது வீட்டின் அருகில் சிறுத்தையைப் பார்த்ததாக கூறியுள்ளார். இதனால் வனத்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையினர் ஆகியோர் மூலம் சிறுத்தையை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து செந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தங்களின் வீடுகளுக்குள்ளே அச்சத்தில் முடங்கியுள்ளனர்.

சிறுத்தையை விரைந்து பிடிக்கக் கோரிக்கை: இதனிடையே, மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தை, தற்போது அரியலூர் பகுதியில் அன்றாடம் சிகிச்சைக்காக குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் எனப் பலரும் வந்து செல்லக்கூடிய மருத்துவமனையின் அருகே சுற்றித்திரிவதால் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக சிக்காமல் உள்ள சிறுத்தையை வனத்துறையினர் விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை பிரச்சாரம்? திமுக - பாஜகவினர் மோதம்.. கோவையில் களேபரம் - நடந்தது என்ன? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details