மாணவர்களுக்கு QR குறியீடு மூலம் ‘திருக்குறள்’ - அரசுப் பள்ளி ஆசிரியருக்கு குவியும் பாராட்டு! - THIRUKKURAL LEARNING QR CODE
அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் மத்தியில் ‘திருக்குறள்’ மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், க்யூஆர் குறியீடு முறையில் கற்றலை உருவாக்கிய ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருக்குறள் கற்க க்யூஆர் குறியீடு உருவாக்கிய ஆசிரியர் மனோகரன் உடன் மாணவர்கள் (ETV Bharat Tamil Nadu)
கரூர்:தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் சமீப காலமாக, தொடுதிரை வகுப்பறைகள், கணிப்பொறிக் கூடங்கள், ஆய்வகங்கள் என அடிப்படை கட்டமைப்புகளை பள்ளிக்கல்வித்துறை மேம்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பல வழிகளில் பள்ளிகளையும், கற்பிக்கும் தரத்தையும் மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மனோகர், தமிழ் வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார்.
க்யூஆர் குறியீடு (QR-Code) வாயிலாக திருக்குறள் கற்றுக் கொள்ளும் நவீன கற்றல் முறையை உருவாக்கியுள்ள அவர், மாணவர்களிடம் திருக்குறளுக்கான முக்கியத்துவத்தை போதித்து வருகிறார். இது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், வெள்ளியணை அரசு தொடக்கப் பள்ளிக்கு சென்ற நமது ஈடிவி பாரத் செய்தியாளரை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மலிங்கம், வகுப்பறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் உடைமைகள், காலணிகளை ஒழுங்குபடுத்தி, அடுக்கி வைத்திருந்தனர்.
க்யூஆர் குறியீடு வாயிலாக திருக்குறள் பயிலும் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் (ETV Bharat Tamil Nadu)
க்யூ ஆர் மூலம் திருக்குறள்:
இதனைத் தொடர்ந்து, பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் மாணவர்களே தயாரித்த பாடத்திட்ட வரைபடங்கள், தயாரிப்பு பொருட்கள் என மாணவர்களை ஆர்வத்துடன் கல்வி கற்கும் சூழல் காணப்பட்டது.
இதுகுறித்து திருக்குறள் க்யூஆர் குறியீடு வடிவமைத்த ஆசிரியர் மனோகரன் கூறுகையில், “கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இது வெள்ளி விழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு பல்வேறு திருக்குறள் சார்ந்த போட்டிகளில் பங்கேற்க அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
க்யூஆர் குறியீடு வாயிலாக திருக்குறள் கற்கும் மாணவர்கள் (ETV Bharat Tamil Nadu)
மாணவர்கள் ஆர்வத்தை தூண்டும் முயற்சி:
அந்த வகையில், திருக்குறளை மாணவர்கள் எளிதாக கற்கும் பொருட்டு இந்த கியூஆர் குறியீடு முறை உருவாக்கப்பட்டது. இதன் வாயிலாக மூலம் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் 50 திருக்குறள்கள் விளக்கத்துடன் எளிதாக படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற கல்வி கற்கும் முறையால் மாணவர்கள் ஊக்கம் பெறுவார்கள்.
இன்றைய தலைமுறையினர் கைப்பேசியை அதிகளவில் பயன்படுத்தி வருவதால், அதனை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என நினைத்துதான் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டேன். மேலும் மாணவர்களின் மனப்பாட சக்தியை அதிகரிக்கும் வகையில் பாட புத்தகங்களை தாண்டி 1,330 திருக்குறள்களை விரைவாக கற்க மாணவர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வித் துறை அதிகாரிகள் உறுதுணையாக உள்ளனர்,” என்றார்.
க்யூஆர் குறியீடு வாயிலாக திருக்குறள் கற்கும் அரசு பள்ளி மாணவர்கள் (ETV Bharat Tamil Nadu)
இதையடுத்து, பேசிய பள்ளி தலைமை ஆசிரியர் தர்மலிங்கம், “தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் வெள்ளியணை அரசு தொடக்கப் பள்ளியில், சுமார் 170 மாணவர்களைக் கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தொடக்க கல்வியில் தமிழ் பாடத்தில் உள்ள திருக்குறளை எளிமையாக கற்றுக் கொள்வதற்கு வசதியாக கியூஆர் குறியீட்டை உருவாக்கி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிகளுக்கு வழங்கியுள்ள நவீன தொடுதிரை கணினி, டேப் ஆகியவற்றை பயன்படுத்தி திருக்குறளை மாணவர்கள் கற்று வருகின்றனர்,” என தெரிவித்தார்.
மாணவர்கள் பெருமிதம்:
தொடர்ந்து பேசிய அப்பள்ளியில் படிக்கும் மாணவி யாழினி, “வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிப்பதற்கு மிகவும் ஆர்வமாக வருகை தருகின்றேன். காரணம் எங்கள் பள்ளி ஆசிரியர் உருவாக்கியுள்ள கியூஆர் குறியீடு.
இதனால், திருக்குறள் கற்றல் முறை எளிதாகியுள்ளது. இந்த க்யூ ஆர் கோடு மூலம் 40க்கும் மேற்பட்ட திருக்குறள் இதுவரை மனப்பாடம் செய்துள்ளேன். ஒவ்வொரு குறளுக்கும் விளக்கம் அறிந்து படிப்பதனால் மறக்காமல் இருக்கிறது” என்றார்.
அதேபோல், அந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பெரிய குமார் கூறுகையில், “பெற்றோரின் கைப்பேசியை பெற்று, அதனை பொழுதுபோக்குக்காக பயன்படுத்தாமல் திருக்குறள் படிக்க பயன்படுத்துகிறேன். இதனால், பெற்றோரும் இதை ஊக்குவித்து வருகின்றனர். தற்போது என் தந்தையின் கைப்பேசியை வாங்கி பயன்படுத்தும் போது கூடுதலான நேரம் எடுத்து திருக்குறள் படித்து வருகிறேன்” என்றார்.