மதுரை: மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் மைதிலி ராஜலட்சுமி தம்பதியரின் மகன், கீழமாத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். ராஜ்குமார் கடந்த ஆண்டு டிசம்பர் கடன் தொல்லையால் மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து, மைதிலி ராஜலட்சுமி தனது மகன் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மைதிலி ராஜலட்சுமியின் மகனை ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டி தனது ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.
அதேபோல் இன்றும் பள்ளிக்கு ஆட்டோ ஓட்டுநருடன் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றபோது அச்சம்பத்து பகுதியில் ஆட்டோவை பின்தொடர்ந்து ஆம்னி வேனில் வந்த மர்ம கும்பல் ஒன்று ஆட்டோவை இடித்து தள்ளி உள்ளது. அத்துடன் ஆட்டோ ஓட்டுனரையும், பள்ளி மாணவனையும் தாக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன், அவர்களின் கண்களை கட்டிய அந்தக் கும்பல், இருவரையும் ஆம்னி வேனில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, நாகமலை புதுக்கோட்டை அருகே கடத்தல் கும்பல் ஆட்டோ டிரைவர் செல்ஃபோன் மூலமாக கடத்தப்பட்ட சிறுவனின் தாயாருக்கு வீடியோ கால் மூலம் மகன் மற்றும் ஆட்டோ டிரைவர் கடத்தப்பட்டத்தை காண்பித்தும், ஆட்டோ ஓட்டுனரின் காயத்தையும் காட்டியும் 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனையடுத்து 2 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், பணத்தை துவரிமான் ரவுண்டானாவிற்கு எடுத்துவர வேண்டும். இல்லையெனில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதைப் போல், சிறுவனையும் வெட்டி வீசி விடுவோம் என்று மிரட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும் காவல்துறையிடம் புகார் அளித்தாலும் மாணவனை கொலை செய்து விடுவோம் என்றும் அந்த கும்பல், சிறுவனின் தாயை மிரட்டியாத கூறப்படுகிறது.இதனையடுத்து மைதிலி ராஜலட்சுமி அந்த கும்பலை குறித்தும், பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ குறித்தும் எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் காசி தலைமையில், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்புகொண்ட ஆட்டோ டிரைவர் செல்ஃபோன் எண்ணை ட்ராக் செய்து தேடி வந்தனர்.
காவல்துறையினர் தங்களை பின்தொடர்வதை கண்ட அந்த மர்ம கும்பல் கண்ணை கட்டியபடி மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகிய இருவரையும் செக்கானூரணி அருகே காட்டுப் பகுதிக்குள் இறக்கி விட்டுவிட்டு தப்பித்துள்ளனர். இதனையடுத்து கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய இருவரையும் அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.