புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பவம் நடந்த உடனேயே மூன்று அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் உயர் சிகிச்சைகள் எல்லாம் அமைச்சர்கள் பரிந்துரை அடிப்படையில் செய்து கொடுத்தவர் முதலமைச்சர்.
ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரணை கமிஷன் அமைத்து அந்த குழு விசாரணை செய்து வருகிறது. மேலும், சிபிசிஐடி போலீசார் எல்லா இடங்களிலும் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு ஆதாரங்களை திரட்டி, யாரெல்லாம் இந்த சம்பவங்களுக்கு காரணமாக இருந்தார்கள் என்பதை கண்டுபிடித்து அந்த பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து தீர்ப்பளித்து இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்கிற உரிமை நமக்கு கிடையாது. ஆனால் தமிழக அரசு எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கை என்பது இதுவரை எந்த அரசும் எடுக்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
உலகமெங்கும் பாராட்டப்படுகிற அளவிற்கு திறமையானவர்கள் தான் தமிழ்நாடு போலீசார். எந்த வழக்கையும் மிகச் சிறப்பாக கையாளக்கூடியவர்கள் தான் தமிழ்நாடு போலீசார். அதேபோல தான் மிகச் சிறப்பாக இந்த வழக்கை கையாண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க :கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்... காவல்துறை குறித்து கடும் விமர்சனம்!
உரிய நடவடிக்கைகள் படிப்படியாக உரிய காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டு வருகின்றது. எனவே இந்த தீர்ப்பு என்பது எங்களை ஆலோசிக்க செய்துள்ளது. தமிழக முதலமைச்சர் நிச்சயமாக அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து ஒரு நல்ல முடிவை எடுப்பார்.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு 2026ம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு எந்த வித பின்னடைவும் ஏற்படுத்தாது. அந்த பகுதியில் உள்ள மக்கள் நாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சில அரசியல் கட்சிகள் இந்த வழக்கை தொடுத்திருந்தனர்.
இந்த விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த ஒருவருக்கு கூட சம்பந்தம் கிடையாது. தொடர்புடையவர்கள் கிடையாது. அப்படியே தொடர்பு இருப்பதாக தெரிந்தால் முதலமைச்சர் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த வழக்கில் அனைத்து வாதங்களையும் நாங்கள் எடுத்து வைத்துள்ளோம்.
எத்தனையோ உயர் நீதிமன்ற தீர்ப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மாற்றப்பட்டுள்ளன.உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் முறையான வாதங்களை எடுத்துரைத்து நிச்சயமாக வெற்றி பெறுவோம். மேல்முறையீடு குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் " என தெரிவித்தார்.
"கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது" :இதனிடையே,சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக உயர்மட்ட குழு கூட்டமானது பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " 68 பேர் உயிரிழந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் நீதிமன்றத்தின் மூலமாக கள்ளச்சாராயம் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. டாஸ்மாக் சாராயம் சந்து கடை சாராயம் என அன்பு நண்பர் துரைமுருகன் இதை ஒத்துக் கொண்டுள்ளார். டாஸ்மாக் சரக்கில் போதை ஏறவில்லை என்பதற்காக சந்து கடை சரக்கை தேடி தமிழ் குடிமக்கள் போகீறார்கள் என கூறினார். இந்த அரசாங்கத்தின் முழு தோல்வி தான் கள்ளக்குறிச்சி சம்பவம்.
தஞ்சையில் பள்ளி ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தான கேள்விக்கு, தமிழகத்தில் தினம் தோறும் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது போதை தான் இதற்குக் காரணம். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் ஆசிரியர்களை கொலை செய்வது, தாக்குவது, பள்ளிக்கூட குழந்தையின் பையில் ஆயுதம் இருக்கிறது. தூக்கி எறிய வேண்டிய மாநில அரசு என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்