புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “சட்டமன்ற உறுப்பினராக உள்ள எவருக்கும் அமைச்சராகும் தகுதி உள்ளது. அமைச்சராக வேண்டும் என்பதற்கு தனியாக விதிகள் ஒன்றும் இல்லை. சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள விதி தான் அமைச்சருக்கும் பொருந்தும். பொன்முடி அமைச்சராக அனைத்து தகுதிகளும் உள்ளது. எனவே அந்த தகுதியின் அடிப்படையில் தான் தமிழக முதல்வர் அவரை அமைச்சராக்க வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளார்.
இதற்கு சட்ட ஆலோசனை நடத்த வேண்டும் என்று ஆளுநர் பதிலளித்துள்ளார். அதற்குத்தான் உச்ச நீதிமன்றம் சரியாக குட்டு வைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுடைய வழக்கறிஞரே ஆளுநருடைய செயல்பாடு கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அப்பேர்ப்பட்ட ஆளுநர் தான் தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறார். ஆளுநரின் இது போன்ற செயல், தேர்தல் காலத்தில் கவலை அளிக்கிறது”, என கூறினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, “விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெற உள்ள அமலாக்கத்துறை சோதனையானது, ஏற்கனவே நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் தொடர்ச்சி என்று தான் பார்க்க வேண்டும். இதனை மிரட்டல் என்று எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் குறைவு. விஜயபாஸ்கர் முக்கியமானவர், இவரும் பாஜகவிற்கு நெருங்கியவர் தான். எனவே அமலாக்கத்துறையின் சோதனையை அச்சுறுத்தும் கண்ணோட்டத்தோடு பார்க்கவில்லை.
அமலாக்கத்துறைக்கு எப்பொழுது ஞானோதயம் பிறக்கிறதோ அப்பொழுதுதான் வருவார்கள். எதிர்கட்சிகள் மீது நடத்திய சோதனை மிரட்டலுக்காக வந்த சோதனை. ஆனால் விஜயபாஸ்கர் மீது நடத்தப்படும் சோதனை ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடத்தப்படும் சோதனை.
குட்கா ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் ரமணா மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது, எங்களுக்கு கிடைத்த வெற்றி. போதைப் பொருள் சம்பந்தப்பட்ட அரசு எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கமே தவிர, எங்களுடைய அரசு இல்லை என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. நாங்கள் போதைப் பொருளுக்கு உடந்தையாக இருக்கவில்லை. முந்தைய அரசாங்கமும், முன்னாள் அமைச்சர்களும் தான் உடந்தையாக இருந்துள்ளனர்.