மதுரை:பரமக்குடியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "அண்மைக்காலமாக பல்வேறு கட்சித் தலைவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்துள்ளார். திமுக அரசு விசாரணை நடப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆனால், குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு சேலம் மாநகரத்தில் முன்னாள் மண்டல குழு தலைவர் சண்முகம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர் தொகுதியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் தொகுதியிலேயே தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கின்ற சூழ்நிலையை தான் பார்க்கிறோம்.
சட்டம் ஒழுங்கு படுபாதாளத்தில் சென்று விட்டது. மக்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது நாட்டு மக்களுக்குத் தெரிகிறது. காவல்துறையைக் கண்டு யாரும் அச்சப்படுகின்ற சூழல் இல்லை. சர்வ சாதாரணமாக கொலை நடைபெறுகிறது. கசாப்பு கடையில் ஆட்டை வெட்டுவதைப் போல் ரவுடிகள் வெட்டி சாய்ப்பதை நாம் பார்க்கிறோம்" எனக் கூறினார்.