நீலகிரி: மலைகளின் ராணி என்று போற்றப்படும் நீலகிரி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இத்தகைய நீலகிரி மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
அதேவேளையில், இங்கு நிலச்சரிவால் ஏற்படும் ஆபத்துகளும் அதிகம். இதன் காரணமாக தற்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் சாலையில், கோடப்பமந்து அருகே நிலச்சரிவைத் தடுக்க, புதிய தொழில்நுட்பமான மண் ஆணி (Soil Nailing) அமைத்து, நீர் விதைப்பு 'ஜியோ கிரிட்' முறையில், மண்ணின் உறுதித் தன்மையை அதிகப்படுத்தி வலிமையூட்டும் பணியை, நெடுஞ்சாலைத்துறை அறிமுகம் செய்துள்ளது.
மண் ஆணி திட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu) மேலும், நிலச்சரிவைத் தடுப்பதற்காக தற்போது பயன்படுத்தப்படும் முறைகளைக் காட்டிலும், மண் ஆணி அமைப்பதால் ஏற்படும் செலவினம் பாதியாக குறைக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்றார் போல் அமைக்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாது, கடந்த மாதங்களில் நீலகிரி மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை பெய்ததால், மண் ஆணி அமைக்கப்பட்ட இடங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் உறுதித் தன்மையோடு உள்ளதால் இத்திட்டம் வெற்றியடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் இடங்கள், சாலைகள் கண்டறியப்பட்டு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், குறைந்த செலவில் இயற்கை அழகைக் காக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என நீலகிரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் குழந்தை ராஜ் தெரிவித்துள்ளார்.
மண் ஆணி திட்டம் என்றால் என்ன? பொதுவாக மண் சரிவைத் தடுக்க கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் கட்டப்படுவதால் தாவரங்கள் மற்றும் மரங்கள் வளராத நிலை ஏற்படுகிறது. இதற்கு மாறாக, ஜியோ கிரிட் எனப்படும் பாலிமர் பொருட்களால் செய்யப்பட்ட முப்பரிமாண இரும்புக் கம்பி வழியாக வலுவூட்டப்பட்ட பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இப்பாய்களின் மேல் பகுதியில் புல் விதைகள் விதைக்கப்பட்டு, ஜியோ கிரிட்களுடன் இணைக்கப்படுகின்றன. மலைகளின் செங்குத்தான சரிவில் மண் அரிப்பைத் தடுத்து சரிவு ஏற்படாமல் இருக்க, ஜியோ கிரிட் வழியாக மண்ணின் உறுதித் தன்மையை அதிகரித்து, ஹைட்ரோ சிட்டிங் முறையில் புல் வளர்க்கப்படுகிறது.
முதலில் மண் சரிவு சாய்வு கோணம் 70 டிகிரிக்கு மிகாமல் தாழ்வான மண் அகற்றப்பட்டு சீரமைக்கப்படுகிறது. பிறகு, செங்குத்தான மண் சரிவைத் தடுக்க மண் மேற்பரப்பில் தலையிட்டு வலுவூட்டப்பட்ட இரும்புக் கம்பிகளை நிலை நிறுத்தும் நவீன தொழில்நுட்பமே மண் ஆணி திட்டமாகும்.
இந்த முறைகள் மலைப்பகுதியான நீலகிரி, வால்பாறை, கொல்லிமலை, ஏற்காடு போன்ற பகுதிகளில் செயல்முறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மண் ஆணி திட்டம் மூலம் வனப்பகுதியை ஒட்டி உள்ள மலைப்பாதையில் வனவிலங்குகள் இடம்பெயர ஏதுவாக உள்ளது. மேலும், தாவரங்கள் உள்ளிட்ட அரிய வகை மரங்களும் வளர ஏதுவாக அமைகிறது. மேலும், இது இயற்கையை காக்கும் திட்டமாக வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் களைகட்டும் ஜப்பான் பொம்மை கண்காட்சி.. ஓரிகாமி பயிற்சிக்கு குவியும் பொதுமக்கள்!
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் ரமேஷ் குமார் மற்றும் சிவக்குமார் ஆகியோர் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாலைகள் பெரும்பாலும் மலைகளின் நடுவேதான் அமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்பட்டால் சாலைகள் பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இதுபோன்ற நிலையில் தற்போது மாநில நெடுஞ்சாலைத் துறையினர் நிலச்சரிவைத் தடுக்க மண் ஆணி என்ற திட்டத்தை நீலகிரி மாவட்டத்தில் அறிமுகம் செய்துள்ளது வரவேற்கப்படுகிறது. இது மழைக்காலங்களில் நல்ல பலனை அளித்துள்ளது. அதுமட்டுமல்லாது, இது இயற்கையோடு ஒன்றியிருப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆகவே, நிலச்சரிவு ஏற்படும் அனைத்து இடங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.