சிவகங்கை: திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு துவங்கி தற்போது வரை 9 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று கட்டங்களை இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட நிலையில், 4ஆம் கட்டத்திலிருந்து இப்பகுதியில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தொடர்ந்து கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருட்கள், சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள், சூதுபவள மணிகள், உறைகிணறுகள், தங்கத்தாலான காதணிகள் உட்பட கொந்தகை அகழாய்வுகளில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடுகளும் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் உலகத் தொல்லியல் வரலாற்றில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறையின் முயற்சி காரணமாக கீழடியிலேயே கள அருங்காட்சியகம் திறக்கப்பட்டு, அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் வருகை தந்து பார்வையிடுகின்றனர்.
இந்நிலையில் தற்போது அகழாய்வு செய்யப்பட்டு வரும் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கியுள்ளது. சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் கீழடியின் தொன்மைத் தடங்கள் இருக்கலாம் என மத்திய தொல்லியல் துறை மதிப்பிட்டிருந்த நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கு சுமார் 20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வாய்ப்புள்ளது எனத் தமிழ்நாடு தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.