வீரபாண்டி பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தை பழனிசெட்டிபட்டி பேரூராட்சி கையகப்படுத்தலா தேனி:தேனி - போடி தேசிய நெடுஞ்சாலையில், முத்துதேவன்பட்டி என்ற பகுதியில் உள்ள வீரபாண்டி பேரூராட்சிக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தினை, நில மாற்றம் ஆணைகள் எதுவும் பெறாமலே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம், அந்த நிலத்தினை கையகப்படுத்தியதாக வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் கீதா சசி புகார் அளித்துள்ளார்.
மேலும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியின் வளர்ச்சிக்கும், வணிக ரீதியிலான நோக்கத்திற்காகவும், அந்த நிலத்தில் அறிவுசார் மையம் கட்டடங்கள் கட்டி, அதற்கு திறப்பு விழாவும் நடைபெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி, இதற்கு முன்பே திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்காக, வீரபாண்டி பேரூராட்சிக்குச் சொந்தமான நிலத்தினை, பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு நில மாற்றம் மூலம் கொடுக்கப்பட்டதாகவும், தற்போது வீரபாண்டி பேரூராட்சியின் எதிர்காலத் திட்டத்திற்காக இந்த நிலங்கள் தேவைப்படுவதாகவும், ஆகையால் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் எனவும், வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் கீதா சசி, தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் கீதா சசி, "எங்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பே, அந்த இடம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்டது என தெரிவித்தோம். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எங்கள் பகுதி மக்கள் போராட்டம் செய்வதாகவே முடிவெடுத்துவிட்டனர்.
ஆனால், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டு, பின்னர் என்ன செய்யலாம் என பார்க்கலாம் என்று போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம். கடந்த 2 வருடமாகவே பல பிரச்னைகள் வருகிறது. அந்த 7 ஏக்கர் இடத்தையே, அது வேண்டும் இது வேண்டும் என பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் குறிப்பிடுகிறார்.
ஆனால், அந்த இடம் வீரபாண்டி பேரூராட்சிக்குச் சொந்தமான இடம், ஆகையால், அந்த இடம் எங்களுக்கு வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன். மாவட்ட ஆட்சியரும் விசாரணை நடத்திவிட்டு, நில அளவை செய்து, எந்த பேரூராட்சிக்குச் சொந்தமோ அவர்களுக்கு வழங்கப்படும் எனவும், விரைவில் நல்ல முடிவை தெரிவிப்பதாகவும் கூறினார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அழைப்பு விடுக்கும் திமுக.. பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுக்கும் விசிக.. அதிருப்திக்கு காரணம் என்ன?