தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“கோயில் கட்டுவதனாலோ கும்பாபிஷேகம் செய்வதாலோ யாரும் அதிகாரத்திற்கு வந்து விட முடியாது” - கே.எஸ்.அழகிரி - மயிலாடுதுறை செய்திகள்

KS Alagiri criticized BJP: கோயில் கட்டுவதனாலோ, கும்பாபிஷேகம் செய்வதாலோ யாரும் அதிகாரத்திற்கு வந்து விட முடியாது என கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி விமர்சனம்
கோயில் கட்டுவதனாலோ, கும்பாபிஷேகம் செய்வதாலோ யாரும் அதிகாரத்திற்கு வந்து விட முடியாது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 1:41 PM IST

கோயில் கட்டுவதனாலோ, கும்பாபிஷேகம் செய்வதாலோ யாரும் அதிகாரத்திற்கு வந்து விட முடியாது

மயிலாடுதுறை:சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஒன்றிய குழு துணைத் தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான பானு சேகர் இல்லத் திருமண விழாவில் நேற்று (பிப்.02) காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், மாநில துணை பொதுச் செயலாளர் கனிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், "ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு காரணம், அவர் பிரதமர் மோடி பேச்சை கேட்கவில்லை என்பதற்காகவே. ஹேமந்த் சோரன் வீட்டில் 10 லட்சம் ரூபாய் இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

அவர் முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார். ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, அமித்ஷா, அண்ணாமலை இவர்களது வீட்டில் பத்து லட்சம் ரூபாய் பணம் இல்லையா? ஒரு முதலமைச்சர் பல்வேறு செலவுகளுக்காக வீட்டில் பணம் வைத்திருப்பார். தற்போது 10 லட்சம் ரூபாய் என்பது ஒரு தொகையே கிடையாது.

அண்ணாமலையின் நடைபயணத்திற்காக அந்தந்த தொகுதியில் 400 முதல் 500 மீட்டர் நடைபயணத்திற்கு எவ்வளவு செலவு செய்யப்படுகிறது? அவ்வாறு செலவு செய்யும் பணம் எங்கிருந்து வந்தது? சோரன் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர், புரட்சியாளராக செயல்பட்டு வருகிறார் என்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதற்கெல்லாம் அவர்கள் சோர்ந்து விடமாட்டார்கள்” என கூறினார்.

தொடர்ந்து மத்திய பட்ஜெட்டில் 25 ஆயிரம் கோடி வறுமையை நீக்கி விட்டதாக அறிவித்தது குறித்த கேள்விக்கு, அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். பத்தாண்டு காலம் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியது காங்கிரஸ். 10 ஆண்டுகளில் 15 ஆயிரம் கோடி பேரை வறுமைக் கோட்டில் இருந்து வெளியேற்றினோம்.

அதற்கான ஆதாரங்களை அப்போது நாடாளுமன்றத்தில் வெளியிட்டோம். இந்த ஆதாரங்களைப் பார்த்து, அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு சான்றிதழை வழங்கினார்கள். வறுமை ஒழிப்புத் திட்டத்தில் சிறந்த திட்டம் என்று சான்று வழங்கப்பட்டது.

அந்த சான்றிதழை யார் சென்று வாங்குவது என விவாதம் எழுந்தபோது, அமைச்சரவையில் பேசிய மன்மோகன் சிங், இது காங்கிரஸின் திட்டமல்ல, இந்திய அரசின் திட்டம். எனவே இந்திய அரசியல் சார்பாக எனது நண்பர் அத்வானி சென்று வாங்கி வர வேண்டும் என தெரிவித்தார். அத்வானி சென்று, ஐநாவில் சான்றை பெற்று வந்தார். இதுதான் ஜனநாயகம்.

ஆனால், நரேந்திர மோடி அத்வானியை எந்த ஒரு நிகழ்வுக்காகவாது அழைக்கிறாரா? காங்கிரஸ் 15 கோடி என்று தெரிவித்ததன் காரணமாகவே, பாரதிய ஜனதா கட்சி 25 ஆயிரம் கோடி வறுமையை நீக்கினோம் என தெரிவித்துள்ளனர். இதற்கான சான்று எங்கே? சான்று வெளியிட வேண்டும்” என கூறினார்.

மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணத்திற்கு நிதி வழங்காமல் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் செல்வதால் என்ன பயன்? கோயில் கட்டுவதனாலோ, கும்பாபிஷேகம் செய்வதாலோ யாரும் அதிகாரத்திற்கு வந்து விட முடியாது. நிறைய பேர் கோயில் கட்டி இருந்த பதவியையே இழந்து இருக்கிறார்கள். ராமரை பிடித்துக் கொண்டு இருப்பது ஆன்மிகத்துக்காக அல்ல, சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை என என்பதற்காகத்தான். மக்களுக்காகச் செய்ததை ஆதாரமாக வெளியிட ஒன்றும் இல்லாததால், ராமர் கோயில் வைத்து விளம்பரம் தேடுகிறார்கள்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் எத்தனை கோடி கருப்பு பணம் வெளியே கொண்டு வந்தீர்கள்? விவசாயிகள் இரட்டிப்பு லாபம் பெறுவார்கள் என தெரிவித்த நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விவசாயம் அதிக அளவில்தான் பாதிக்கப்பட்டது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பெட்ரோல் டீசல் 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று உலகத்திலேயே கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், தற்போது பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் சாதனையா?” என கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: விஜயின் அரசியல் வருகை; "மக்கள் தான் முடிவெடுப்பார்கள்" - அண்ணாமலை சூசகம்!

ABOUT THE AUTHOR

...view details