சேலம்:கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் தன்னுடைய உறவினர்களுடன் மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் அண்ணாதுரை ஆகியோருடன், சேலம் சரக டிஐஜி உமாவை சந்தித்து, புகார் மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் “திருப்பத்தூரைச் சேர்ந்த முகமது அலி என்ற ஏஜென்ட், என்னுடைய சகோதரி மகேஸ்வரியிடம் மலேசியாவில் வேலை உள்ளதாகவும் அங்குச் சென்றால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறினார்.
இதனை நம்பி என்னுடைய சகோதரி கடந்த மாதம் 4ஆம் தேதி ஏஜெண்ட் மூலம், சென்னையிலிருந்து விமான மூலம் மலேசியாவுக்குச் சென்றார். பின்னர் அவரை தொடர்பு கொண்டு பேசுகையில், மலேசியாவில் வேலை உள்ளதாகக் கூறிவிட்டு புரோக்கர்கள் தன்னை 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டதாகக் கூறிக் கதறி அழுதார்.
மேலும் சட்டவிரோதமாக ஒரு அறையில் அடைத்து வைத்து சித்தராவதைச் செய்வதாகவும் கூறினார். அதன் பிறகு என்னுடைய சகோதரி தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது சகோதரி தொடர்ந்து மலேசியாவிலிருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே என்னுடைய சகோதரியை மீட்டுத் தர வேண்டும் மேலும் மலேசியாவில் வேலை என்று அழைத்துச் சென்று விற்பனை செய்த ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் அண்ணாதுரை கூறுகையில் “ திருப்பத்தூரைச் சேர்ந்த முகமது அலி என்பவரும், சென்னையைச் சேர்ந்த முத்து என்பவரும், மகேஸ்வரியிடம் மலேசியாவில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோரில் வேலை உள்ளதாகவும், அங்குச் சென்றால் கை நிறையச் சம்பளம் கிடைக்கும் என்று கூறி மலேசியாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.