கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி அருகே குரியனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த திம்மப்பா - பத்மம்மா தம்பதியினரின் மகன் ரமேஷன் (33). இவர் போலந்து நாட்டில் தனது மேற்படிப்பைப் படிக்கச் சென்றார். பின்னர், போலந்தில் உள்ள USA VILLANOVA என்ற யுனிவர்சிட்டியில் ஆராய்ச்சித் துறையில் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், போலந்து நாட்டில் கல்லூரியில் படிக்கும்போது, அதே நாட்டைச் சேர்ந்த ஆடேம் மல்கோர்த்த - டிபிகா தம்பதியினரின் மகள் எவலினா மேத்ரா (30) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் காதலைத் தங்களுடைய பெற்றோரிடம் கூறி உள்ளனர்.
முதலில் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரமேஷன் பெற்றோர் ஆலோசித்து வந்துள்ளனர். பின்னர் இரு வீட்டாரும் யோசித்த நிலையில், ரமேஷன் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். கடந்த மாதம் இருவரும் இந்தியா வந்த நிலையில், இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்று (மே 4) நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று (மே 5) தமிழ்க் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் இப்பகுதி கிராம மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்திய நிலையில், ஏராளமான பொதுமக்கள் வந்து மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.
இதையும் படிங்க:"திமுக ஆட்சிக்கு வந்தால் தவறான விஷயங்கள் நடப்பது இயல்பு தான்" - சீமான் கடும் தாக்கு! - Seeman Speech In Chennai