கிருஷ்ணகிரி: 18-வது மக்களவைத் தேர்தல் கடந்த மார்ச் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று(ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மையான 272 தொகுதிகள் கிடைக்காத நிலையில் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பது இன்னும் தெரியாத நிலையில் இருந்தாலும், இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளதால் இம்முறை கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 39 இடங்களையும், புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் தேசிய அளவில் திமுக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜக தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாவிட்டாலும் வாக்கு சதவீதம் 11.24-ஆக உயர்ந்துள்ளது.
கவனம் ஈர்த்த வித்யா ராணி:பாஜகவில் இருந்து விலகி கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக களமிறங்கிய வீரப்பன் மகள் வித்யா ராணி கவனிக்கப்படும் வேட்பாளராக மாறினார். புதிய சின்னம், புதிய முகம் என தொகுதியில் அறியப்படாத நபராக வித்யா ராணி இருந்தாலும் மூலை முடுக்குகளில் நேரடியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டு வேட்டையில் இறங்கினார்.
தேர்தல் களத்தில் ஈடிவி பாரத்திற்கு பேட்டியளித்த வித்யா வீரப்பன், "அப்பா (வீரப்பன்) சில விஷயங்களை அன்றே தெரிவித்துவிட்டார். அன்று கூறியதை இன்றுள்ள மக்களுக்கு புரியும் வகையில் கடவுள் வாய்ப்பு அமைத்துக் கொடுத்துள்ளார். தந்தை பலதரப்பட்ட மக்களிடம் பலவிதமாக பிரதிபலிக்கப்பட்டார். ஆனால் இன்று அவர் செய்த ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும், ஒரு காரணம் உள்ளது என்பது மக்களிடம் போய் சேர்ந்தது நல்ல விஷயம் தான். மக்களிடம் நல்ல ஆதரவு உள்ளது. தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன்" என உறுதியுடன் கூறினார்.
இதனிடையே, கிருஷ்ணகிரி தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 4,92,883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவதாக அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 3,00,397 வாக்குகளும், மூன்றாவதாக பாஜக வேட்பாளர் நரசிம்மன் 2,14,125 வாக்குகளும், நான்காவதாக நாம் தமிழர் வேட்பாளர் வித்யா ராணி 1,07,083 வாக்குகளும் பெற்றுள்ளனர். இது அந்த தொகுதியில் பதிவான வாக்குகளில் 9.02 விழுக்காடு ஆகும்.
நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளில் போட்டியிட்டு 8.19 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ள நிலையில் 12 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக, பாஜகவை பின்னுக்கு தள்ளிய நாம் தமிழர்.. தொகுதி வாரியாக வாக்கு விபரம்.. மாநில கட்சி அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு!