சேலம்: சேலத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆந்திரப் பிரதேச மாநிலம் ஆந்திரா மற்றும் தெலங்கானா என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திரா மாநிலத்திற்கு தலைநகராக அமராவதியை உருவாக்கிட மத்திய அரசு நிதி வழங்கும் என ஏற்கெனவே அறிவித்தது. இந்த நிலையில்தான், ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதி என்று அம்மாநில முதலமைச்சர் முடிவு செய்ததால் அவர்களுக்கு சிறப்பு நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது. இதைக்கூட புரிந்து கொள்ளாமல் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை என்று பேசி வருகிறார்.
சேலத்தை தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தால் 15 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல 20,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக நாங்கள் வழங்கத் தயாராக இருக்கிறோம். முதலமைச்சர் அதை உருவாக்க தயாரா? தமிழ்நாட்டில் 234 சட்டசபைத் தொகுதிகளை வைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. 134 தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாநிலமும், 100 தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாநிலம் என்று இருந்தாலே ஆட்சியை சிறப்பாக நடத்தலாம்.
இவருக்கு ஒரு மகன் மட்டுமே உள்ளதால் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கத் தயங்குகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். சேலத்தை தலைநகராகக் கொண்டு தமிழகம் இரண்டாக பிரிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. அப்படி பிரித்தால் புதிதாக தலைநகர் உருவாவதற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் பெற்றுத்தர தமிழக பாரதிய ஜனதா தயாராக உள்ளது.