சென்னை: தமிழ் திரைப்படங்களை யூடியூபில் ரிவ்யூ செய்பவர் பிரசாந்த் ரங்கசாமி. இவர் கடந்த ஜூன் 6ஆம் தேதி சென்னை வடபழனியில் இருந்து அண்ணாநகர் மார்க்கமாக காரில் சென்றுள்ளார். அப்போது, கோயம்பேடு பாலத்தின் கீழே அவர் சென்றபோது திடீரென குறுக்கே வந்த ஆட்டோ ஒன்று நிலைதடுமாறி சாய்வதுபோலச் சென்று, பின்னர் பாலத்தின்மீது ஒருவழிப்பாதையில் சென்றுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர் பேசும் வீடியோ (video credits - greater Chennai police X page) இதை தனது காரில் இருந்த கேமராவில் வீடியோவாக பதிவு செய்த பிரசாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, “நான் அமைதியாக எனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இது நடந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சென்னை போக்குவரத்து போலீசாருக்கு எக்ஸ் தளத்தின் வாயிலாக புகார் தெரிவித்திருந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், கோயம்பேடு போக்குவரத்து போலீசார் ஆபத்தான முறையில் ஆட்டோவை இயக்கிய நபர் யார் என்பது குறித்து ஆட்டோவின் நம்பரை வைத்து தீவிரமாக தேடி விசாரித்து வந்தனர். அந்த விசாரணையில், அது விழுப்புரத்தைச் சேர்ந்த நபரின் ஆட்டோ என்பதும், சென்னையில் முத்து என்பவர் அந்த ஆட்டோவை ஓட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது. பின்னர், ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்த போலீசார், அவர் மீது வேகமாக ஓட்டுவது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், அந்த நபரை பேச வைத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், “ஆட்டோவை வேகமாக ஓட்டியது தவறு. போலீசார் என்னைப் பிடித்து எனக்கு அறிவுரை கூறினார்கள். என்னைப் போல் யாரும் ஆட்டோவை ஓட்ட வேண்டாம்” என கேட்டுக் கொண்டார். அந்த வீடியோவை சென்னை மாநகரப் போக்குவரத்து போலீசார் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:"தேர்தலில் அதிமுகவிற்கு பின்னடைவு இல்லை" - பாஜக வாக்கு குறைய இதுதான் காரணம்.. ஈபிஎஸ் அளித்த விளக்கம்! - edappadi palanisamy