திண்டுக்கல்:தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கொடைக்கானல். தமிழ்நாடு மட்டுமல்லாமல், பிறமாநிலங்களில் இருந்தும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். தற்போது கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த 2 மாதங்களாக கடும் வறட்சி நிலவி வருகிறது.
இந்நிலையில், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. பூம்பாறை, மன்னவனூர் பகுதியில் சிறிய அளவில் பற்றிய காட்டுத்தீ, தொடர்ந்து எரிந்து வருகிறது.
தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சி துரிதமாக நடைபெறாததால், காட்டுத்தீ அருகில் இருக்கக்கூடிய வனப்பகுதிகளுக்கும் பரவத் துவங்கியுள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதில் பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட 3 கிராமங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து காட்டுத்தீ இரவு, பகலாக எரிவதால், சுமார் 500 ஏக்கருக்கு மேலாக காடுகள் இதுவரை எரிந்து நாசமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பசுமை போர்த்திய புல்வெளிகள் போன்ற காட்சியளித்த வனப்பகுதிகள் அனைத்தும், தற்போது சாம்பல்கள் நிறைந்த காடுகளாகக் காட்சியளிக்கிறது. மேலும், பூம்பாறையில் இருந்து மன்னவனூர் மற்றும் கூக்கால் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் அப்பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.