சென்னை: தெற்கு ரயில்வே, சென்னை கோட்டத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 7 ரயில் நிலையங்கள், 7 ரயில்வே மேம்பாலங்கள், 28 சுரங்கப் பாதைகள் உள்ளிட்டவற்றிற்கு வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்ட உள்ளார். இது தொடர்பாக சென்னை பூங்கா நகரில், தென்னக ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “மொத்தம் 17 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. அதில், ஏற்கனவே 8 ரயில் நிலையங்களுக்கு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 7 ரயில் நிலையங்களுக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.
தற்போது திரிசூலம் மற்றும் குரோம்பேட்டை ரயில் நிலையங்களும் இந்த திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால், ரயில் நிலையங்கள் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. திருத்தணி, சூலூர்பேட்டை, பரங்கிமலை ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டு, வரும் மார்ச் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும்.
ரயில்வே பராமரிப்பு பணிகளை கோடை காலத்தில் மேற்கொண்டால்தான் சரிவர மேற்கொள்ள முடியும். ரயில்வே பாதுகாப்பிற்கு ரயில்வே பராமரிப்பு பணிகள் அவசியம். பொதுவாக, ஜனவரி முதல் மார்ச் மாதத்தில் இது போன்று பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, இது போன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது துறை ரீதியாக அவசியமாகிறது. விடுமுறை நாட்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுவதால், பயணிகள் பெருமளவில் பாதிப்படைய மாட்டார்கள். வில்லிவாக்கம் புதிய ரயில் முனையம் அமைப்பதற்கு அதிக நிலம் தேவைப்படுகிறது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை கடற்கரை - தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்களில், 5 ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் காலை, மாலை வேளைகளில் அதிகமாக பயணிப்பதால், peak hour நேரத்தில் இருமார்க்கத்தில் தலா 5 ரயில் சேவை என மொத்தம் 10 ரயில் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம்: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்த 6 மாதத்தில் திறக்கப்படும். ஆதம்பாக்கத்தில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் பாலம் விழுந்ததற்கு ஜாக்கி சரியாக நிறுவப்படாததே காரணம். மற்றபடி பாலத்தின் உறுதித் தன்மை சிறப்பாகவே உள்ளது. உதிர்ந்த பாலத்தை அப்புறப்படுத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. ரயில்வே கட்டுமானங்கள் கவனத்தோடு விதிகள் பிரகாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க:கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பை தொடர்ந்து சாகும் வரை உண்ணாவிரதம்.. வலுவடையும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்!