சென்னை:திமுகவின் சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜனை குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். திமுகவின் தலைமை கழக பேச்சாளராக இருந்து வரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்கள் சோசியல் மீடியாவில் அவ்வப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இவர் மேடைகளில் எதிர்க் கட்சியினரை விமர்சனம் செய்யும்போது, இரட்டை அர்த்தங்களை கொண்ட வார்த்தைகளை பயன்படுத்துவது, பெண் அரசியல்வாதிகளை ஆபாசமாக திட்டுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையானதால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு பின்னர் வெளியில் வந்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுக தலைமை கட்சியில் சேர்த்துக் கொண்டது. இந்நிலையில் அவர் தொடர்ந்து எதிர்கட்சியினரை கலாய்ப்பதான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
குஷ்பு ஆவேசம்: இந்த சூழலில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பாஜக மூத்த தலைவரான தமிழிசையை விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, அவர் மீது வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று ஒரு பழமொழி உண்டு. இந்த மனிதர் அப்படிதான். மீண்டும் மீண்டும் பெண்களை மிகவும் புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார். திமுகவினரை இடைவேளையில் மகிழ்விக்க இவரை போன்ற நோயுற்ற மனம் கொண்டவர்கள் தேவை என்பதால் முதல்வர் ஸ்டாலின் இவரை இடைநீக்கம் செய்து மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளார்.
வழக்கு தொடர போகிறேன்: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நான், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடரப் போகிறேன். மேலும், அவர் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கான பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டிய இடத்தில் அவர் இருப்பதை நான் உறுதி செய்வேன். இதுபோன்ற பேச்சுக்கள் மூலம் இவரை போன்ற ஆட்கள் அவர்கள் வளர்ந்த விதத்தை காட்டுவதோடு தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களின் அவல நிலையை பிரதிபலிக்கிறது.
திமுகவுக்கு நீண்ட வரலாறு உண்டு: சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவில் மிகவும் மதிக்கப்படும் உறுப்பினர். பாஜக குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களிடம் இருந்தும் அவருக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை பெறுவார். பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களாக திமுகவுக்கு நீண்ட வரலாறு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அறிவாலயத்தின் அலமாரியில் இருந்து எலும்புக்கூடுகள் வெளியே வர தொடங்கினால், இந்த முட்டாள்களுக்கு தங்கள் அசிங்கமான முகங்களை எங்கு மறைப்பது என்று தெரியாது" என குஷ்பு கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளார்.
இதேபோல பாஜகவை சேர்ந்த நடிகை ராதிகா, "சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை குறித்து திமுகவில் உள்ள பல தலைவர்களிடம் தனிபட்ட முறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், திமுகவின் மலிவான பிரச்சாரத்திற்காக இவரை போன்ற ஆட்களை அனுமதிப்பது மிகுந்த அவமரியாதை காட்டுகிறது" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை பாஜக நிர்வாகியின் கணவர் மீது தாக்குதல்; கத்தியோடு சாலையில் தப்பிச் செல்லும் புகைப்படம் வெளியானது!