கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட கேரளம் வாகன ஆய்வாளர்கள், அவ்வழியாக வந்த தமிழக வாகனத்தை ஆய்வு செய்ததில், ஒரிஜினல் டயருக்கு பதிலாக ஆல்ட்ரேஷன் டயர் போட்டுள்ளதால், ஸ்டெப்ணியை சேர்த்து 5 டயர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இது குறித்து வாகன ஓட்டிகள் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் அருகில் உள்ளதால், ஏராளமான பொதுமக்கள் எல்லையோரம் உள்ள கோவிந்தபுரம், கோபாலபுரம், மீனாட்சிபுரம், நடுப்புனி, செம்மணம்பதி சோதனை சாவடிகள் வழியே அன்றாட பணிகளுக்காகச் சென்று வருவது வழக்கம்.
அப்பகுதிகளில் கேரள போலீசார் மற்றும் வாகன ஆய்வாளர்கள், அவ்வழியாகச் செல்லும் தமிழக வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்து அபராதங்களை விதித்து வருகின்றன. சமீபத்தில் நான்கு நண்பர்களுடன் ஒரு பெண் சென்ற வாகனத்தை நிறுத்தி, ஆதார் அட்டை உட்பட பல்வேறு ஆவணங்களைக் கேட்டு அபராதம் விதித்தனர். இது குறித்த வீடியோ வைரலாகியது.
இந்நிலையில், பொள்ளாச்சி அடுத்த கோபாலபுரம் சோதனை சாவடியில், கேரள போலீசார் மற்றும் வாகன ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த தமிழக வாகனத்தை, போலீசார் வழிமறித்த ஆய்வு செய்துள்ளனர். இதில், வாகனத்தின் ஒரிஜினல் டயருக்கு பதிலாக ஆல்ட்ரேஷன் டயர் பொருத்தப்பட்டுள்ளது என்று கூறி, டயர்களுக்கு தலா 5 ஆயிரம் அபரதாம் என்று 4 டயர்களுக்கு ரூ. 20 ஆயிரமும், ஸ்டெப்ணிக்கு 5 ஆயிரம் சேர்த்து 25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.