"நான் அங்கிருந்தால் கத்தி எடுத்து வெட்டியிருப்பேன்" - வேலூர் பிரச்சாரத்தில் கொந்தளித்த கதிர் ஆனந்த்! வேலூர்: நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், இன்று (ஏப்.8) திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர், வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, சோலூர், பெரியாங்குப்பம், நாச்சார் குப்பம், விண்ணமங்கலம், மின்னூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “தற்போது வெயிலின் தாக்கத்தை விட தங்க விலையின் ஏற்றம் தான் மிகவும் அதிகமாக உள்ளது. நகைக்கடையின் கதவுகளைக் கூட நம்மால் திறக்க முடியாத அளவு, கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் விலை ஏறி வருகிறது. மோடி ஆட்சி தொடர்ந்தால் தங்கம் சவரன் 1 லட்சத்திற்கு விற்கப்படும்.
சாதாரண நடுத்தர மக்கள் தங்கம் எப்படி வாங்குவார்கள், அனைத்திலும் விலைவாசி ஏறியுள்ளது. மேலும், டெல்லியில் விவசாயிகள் உடம்பில் ஒருபொட்டு துணியில்லாமல், முழு நிர்வாணமாக போராட்டம் நடத்தினர். அவர்களைக் கூட மோடி சந்திக்கவில்லை. மணிப்பூரில் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டனர்.
அதற்கு மோடி பதில் சொல்லவில்லை. நாங்கள் கேள்விப்பட்டோம் என்று கூறினார். நான் அங்கிருந்தால் அனைவரையும் கத்தி எடுத்து வெட்டி இருப்பேன். ரத்தம் துடிக்கிறது. திரும்பியே பார்க்காதவர் மோடி. எனவே, மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர், விண்ணமங்கலம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டுச் சென்ற போது, மது அருந்திவிட்டு வந்த நபர் ஒருவர் வேட்பாளரின் வாகனத்தை முற்றுகையிட்டு, திமுக ஆதரவாளரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மது அருந்திவிட்டு வந்த நபரைக் கைது செய்து, ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.
இதையும் படிங்க:அதிமுக கூட்டணியின் பிரதமா் வேட்பாளார் எடப்பாடி பழனிசாமியா? - தருமபுரி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி! - Lok Sabha Election 2024