கரூர்:கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முல்லா தெருவைச் சேர்ந்தவர், ஜெய்லானி என்பவரது மனைவி பாத்திமா பீவி (36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜெய்லானி, தனது நண்பர் அமீது என்பவருக்கு, மகா பைனான்ஸ் என்ற நிறுவனம் மூலம் தவணை முறையில் எல்இடி டிவி (LED TV) வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதற்கான தவணையை செலுத்தாமல் குடும்பத்துடன் அகமது தலைமறைவாகி விட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக நிதி நிறுவனத்தின் நெருக்கடியால், கடன் உத்தரவாதம் அளித்தவர் என்ற அடிப்படையில் தவணைத் தொகையை பாத்திமா பீவி செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், தைப்பொங்கல் அன்று, மகா பைனான்ஸ் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள், வலுக்கட்டாயமாக பாத்தமா பீவி வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த வேறொரு டிவியை பறிமுதல் செய்து சென்றுள்ளனர்.
மேலும், நிதி நிறுவனத்தில் கால அவகாசம் வழங்கினால், மீதமுள்ள தவணைத் தொகையைச் செலுத்தி விடுவதாக உறுதியளித்தும் பாத்திமா பீவியின் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற டிவியைக் கொடுக்க மறுத்துள்ளனர். மாறாக, மொத்த கடன் தொகையையும் செலுத்தி முடித்தால் மட்டுமே டிவியை வழங்க முடியும் எனக் கூறி உள்ளதாகத் தெரிகிறது. இதனால், ரூ.5,000 பணம் செலுத்தியுள்ளனர். ஆனாலும், மொத்தத் தொகை செலுத்தினால் மட்டுமே டிவியை வழங்க முடியும் எனக் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட ரூ.1,000 பொங்கல் பரிசுத் தொகுப்பு பணத்தையும் வீட்டில் வந்து, மகா பைனான்ஸ் ஊழியர்கள் வசூல் செய்து சென்றுள்ளனர். இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் பாத்திமா பீவி புகார் அளித்துள்ளார். ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள் மீதும், அந்நிறுவனத்தின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காவல் துறையினர் காலதாமதப்படுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த பாத்திமா பீவி தனது வீட்டில் ஜன.20ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து கரூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாத்திமா பீவி, மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.22) உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். இந்நிலையில், பாத்திமா பீவியின் உடலை வாங்க மறுத்து, திருச்சி அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக திருச்சி அரசு மருத்துவமனையில் இன்றும் (ஜன.23) உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபோது பாத்திமா பீவி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் இறப்பதற்கு முன்பு, 'தாங்கள் வாங்காத கடனுக்காக, குடியிருக்கும் வீட்டின் அருகே அக்கம்பக்கத்தினர் பார்க்கும் வகையில் நிதி நிறுவன ஊழியர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் பேசிச் சென்றதையும், நிதி நிறுவனத்தின் மீதும், அதன் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்து பேசியுள்ளார்.
மேலும், இந்த நிகழ்வு முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என கந்து வட்டிக்கு எதிரான கூட்டமைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூக அலுவலருமான சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பல்லாவரம் எம்எல்ஏ மகன் மருமகள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை கூறுவது என்ன?