கரூர்:கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சி செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திமுக மேலிடப் பொறுப்பாளர் எம்பி அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.கரூர்-கோவை சாலையில் உள்ள பிரேம் மஹாலில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்த கூட்டத்தில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, எம்எல்ஏகள் இளங்கோ, சிவகாமசுந்தரி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேசுகையில்," ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அதிமுக, மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் மசோதாவைக் கொண்டு வந்த போது அது மக்களுக்கு எதிரான சட்டம் என்று தெரிந்தும் அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.
தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத்தொகை ஒரு பைச கூட வழங்க முடியாது என மத்திய அரசு அறிவித்தது. அப்போது, ஏன் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு எதிராக போராடவில்லை. இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாரதிய ஜனதா கட்சி தனித்தனியாக தேர்தலில் போட்டிப் போடுகின்றனர். அதிமுகவுக்கு வாக்களிப்பதும்,பாஜகவுக்கும் வாகளிப்பதும் ஒன்றுதான்.
கரூரில் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் மூன்று மொழிகளில் நாடளுமன்றத்தில் பேசுவேன் என பெருமையாகக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். எத்தனை மொழிகளில் பேசுகிறோம் என்பது முக்கியமில்லை எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பது தான் முக்கியம்" என்றார்.