திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று (சனிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர், மாலை வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளம்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், இளைஞர் பாசறை மாநிலச் செயலாளருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவத்தை, ஜோதிமணி தரக்குறைவாக பேசியதாகக் கூறி, வேடசந்தூர் அடுத்துள்ள கோவிலூர் ராமநாதபுரம் என்னும் இடத்தில், ஜோதிமணியின் காரை இளம் பெண் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் சிலர் திடீரென சிறைபிடித்தனர்.
பின்னர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், அவரின் காரை நகர விடாமல் சரமாரியாக கேள்வி எழுப்பினர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த வாக்குவாதமானது நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஜோதிமணி காரின் பின்னால் வந்த வேடசந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ காந்திராஜன் இறங்கி, இளம்பெண் உட்பட அதிமுக தொண்டர்களை சமாதானப்படுத்தினார். இதனையடுத்து, ஜோதிமணியின் காரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.