துப்புரவு பணியாளர்கள் காலில் விழுந்து பிரச்சாரத்தை தொடங்கிய கரூர் பாஜக வேட்பாளர் கரூர்: மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், கரூரிலிருந்து மாற்றம் தொடங்கும் என வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கூறியுள்ளார்.
கரூர் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் இன்று (மார்.25) தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். கரூர் தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்ட அவர், அப்பகுதியில் தனது முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
கரூர் மில்கேட் பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த அவர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேலிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வின் போது, பாஜக கூட்டணிக் கட்சியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் புகலூர் சுரேஷ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் என்.நாட்ராயன், ஐஜேகே கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் கண்ணன், மேற்கு மாவட்டச் செயலாளர் மாணிக்கம், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் பசுபதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறி வாக்குகளைச் சேகரிக்கத் தொடங்கிய அவர், அங்கிருந்த டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து, நூதன பிரச்சாரத்தை மேற்கொண்டார். மேலும் அப்பகுதியிலிருந்த துப்புரவுப் பணியாளர்களின் காலில் விழுந்து, அவர் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வி.வி.செந்தில்நாதன், “எனக்குக் கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கும், தமிழக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடைபெறும், 2024 மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்கு சேகரிக்க வேண்டும், யாரைப் பிரதமராகக் கொண்டு வர வேண்டும் என ஏற்கனவே மக்கள் முடிவெடுத்து விட்டனர்.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக, பாரத பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கி உள்ளார். ஆனால், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுக் காலத்தில் இரண்டு திராவிட கட்சிகள் தமிழக மக்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை, மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இதை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்போம் நிச்சியமாக பாஜக வெற்றி பெறும், கரூரிலிருந்து ஒரு மாற்றம் பிறக்கும்”, என்றார்.
இதையும் படிங்க: தென்சென்னை வேட்புமனு தாக்கலின் பொது தமிழிசை மற்றும் தமிழச்சி சந்தித்து கொண்ட நெகிழ்ச்சி தருணம்! - Tamilisai Filed Nomination