தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் கர்நாடகா காந்தி.. ஒரு நாளைக்கு 100 கி.மீ. நடைபயணம்.. 55 வயதில் எதற்காக இந்த யாத்திரை? - Karnataka Gandhi - KARNATAKA GANDHI

Karnataka Gandhi: காந்தியின் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் 'குடியை ஒழிப்போம் காந்தியைப் படிப்போம்' எனும் முழக்கத்தோடு கர்நாடகா மாநிலத்திலிருந்து பாதயாத்திரையாக பரப்புரை மேற்கொண்டு வரும் முத்தண்ணா குறித்து விரிவாகப் பார்ப்போம்.

மாணவிகளுடன் காந்தியவாதி முத்தண்ணா
மாணவிகளுடன் காந்தியவாதி முத்தண்ணா (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 3:12 PM IST

மதுரை:இந்திய நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கர்நாடகா காந்தி என்றழைக்கப்படும் முத்தண்ணா பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவரின் முழுபெயர் முத்தப்பா சன்னபசப்பா திர்லாபூர் என்பதாகும். கர்நாடக மாநிலம், கர்கிகட்டி என்ற கிராமத்திலிருந்து நடைபயணத்தைத் தொடங்கிய அவர், ஏறக்குறைய ஆயிரத்து 300 கி.மீ பயணித்து மதுரை வந்தடைந்தார்.

சுவாமிநாதன் மற்றும் முத்தண்ணா பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

காந்தியக் கொள்கையால் மட்டுமன்றி, அவரது உருவத்தாலும் வரித்துக் கொண்டு அதே தோற்றத்தில் மழித்த தலை, அரையாடை, ஊன்றுகோல், இடுப்புக் கடிகாரம், கண்ணாடி, தோள் துண்டு என அச்சு அசலாக காந்தியைப் போன்றே நடந்து, 'குடியை ஒழிப்போம் - காந்தியைப் படிப்போம்' என்ற முழக்கத்தோடு பொதுமக்களை, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியரைச் சந்தித்து வருகிறார்.

கர்நாடகா காந்தி:இந்நிலையில், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு வந்த கர்நாடக காந்தி முத்தண்ணா, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "நான் பலமுறை மதுரை வந்திருக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் தரும் மரியாதையும், அன்பும் என்னை மிகவும் நெகிழ வைத்துள்ளது.

எனக்கென்று பெயர் இருந்தாலும், என்னை எல்லோரும் காந்தி என்றுதான் அழைப்பார்கள். தற்போதைய சூழலில் மகாத்மாவின் கொள்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்னுடைய முதல் பாத யாத்திரையை கர்நாடகாவிலுள்ள கர்கிகட்டி கிராமத்திலிருந்து கன்னியாகுமரி வரை 1,300 கி.மீ. தூரம் மேற்கொண்டேன்.

காந்தியமே வழிகாட்டி:அப்போதிலிருந்தே குடியை நிறுத்துவோம், விலங்குகளை பாதுகாப்போம், தண்ணீரைச் சேமிப்போம், மரங்கள் வளர்ப்போம் என்பதை வலியுறுத்தியே எனது பாதயாத்திரை அமைந்தது. இந்த வேண்டுகோளை மாணவ-மாணவியரிடம் மட்டுமன்றி, பொதுமக்களிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

அதேநேரம், அவர்களிடம் இந்தியப் பண்பாட்டின் முக்கியத்துவத்தையும் விளக்கி வருகிறேன். பெற்றோர், ஆசிரியர், சகோதரர்களுக்கு மரியாதை தர வேண்டும். வெறுமனே பரப்புரை மட்டுமன்றி, அதனை புரியும் வகையில் மாணவர்களுக்கு விளக்கியும் வருகிறேன். கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே கோரிக்கையை வலியுறுத்தி எனது கிராமத்திலிருந்து அயோத்தி வரை 2,500 கி.மீ. தூரம் பயணித்து பரப்புரை செய்தேன்.

உடல் தானம்:இதுவரை 50க்கும் மேற்பட்ட முறை எனது ரத்தத்தை தானமாக அளித்துள்ளேன். மேலும், எனது உடலை கடந்த 2017ஆம் ஆண்டே மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க விண்ணப்பம் வழங்கியுள்ளேன். இப்போதும் எனது பரப்புரையின் பொருட்டு நாளொன்றுக்கு 100 கி.மீ. தூரம் பாதயாத்திரையாகச் செல்கிறேன். காலை 6 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்குள் 100 கி.மீ. தூரத்தை அடைந்துவிடுவேன். இந்த வேகத்தில் என்னோடு நடக்க யார் வேண்டுமானாலும் வரலாம். இதனைச் சவாலாகவே அழைக்கிறேன்" என்றார்.

மீண்டும் காந்தி வேண்டும்:இதனைத் தொடர்ந்து, நேதாஜி தேசிய இயக்கத்தின் நிறுவனர் சுவாமிநாதன் கூறுகையில், 'காந்தியின் உருவத்தோடு மட்டுமன்றி, அவரது சிந்தனையோடு யாத்திரை மேற்கொண்டு வரும் முத்தண்ணாவை, காந்தி, காந்தி என்றே அழைத்து அனைத்து மக்களும் அன்பு பாராட்டி மகிழ்கின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை வந்திருந்தபோதே முத்தண்ணாவுக்கு மதுரை மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பைக் கொடுத்தனர். தேசபக்தி உணர்வை விட்டு விலகிப் போகின்ற இந்த காலத்தில், அதை நோக்கி இழுத்து வருகின்ற பணியை முத்தண்ணா மேற்கொண்டு வருகிறார்.

இந்தியர்களின் ஒற்றுமை:இந்தியர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி முத்தண்ணா மேற்கொள்கின்ற பாதயாத்திரை, மீண்டும் ஒரு காந்தியை உயிர்த்தெழ வைக்கின்ற தேவையைத் தான் உணர்த்துகிறது. தனது வாழ்நாளெல்லாம் மகாத்மா காந்தி எப்படி நடந்தாரோ, அதேபோன்று முத்தண்ணாவும் நடந்தே இந்திய மக்களை காந்தியக் கொள்கைகளால் ஒருங்கிணைக்கிறார்.

காந்தியக் கொள்கைகள், வரலாறுகள் குறித்த நூல்களெல்லாம் நூலகங்களில் இருக்கின்றன. அவற்றைத் தேடி படித்தவர்களே செல்வதில்லை எனும்போது, அதன் அவசியத்தைத் தனது பாத யாத்திரையின் வாயிலாக உணர்த்திக் கொண்டேயிருக்கிறார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:வேலூர் அருகே ஒரே கிராமத்தில் 3000 ராணுவ வீரர்கள்.. கம்மவான்பேட்டை ராணுவப்பேட்டையாக மாறிய ரகசியம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details