கோயம்புத்தூர்:கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் பெரோஸ்கான். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் ஹோட்டல் ஒன்று நடத்தி வருவதுடன், சீனா மொபைல் டீலராகவும் இருந்து வருகிறார். இவருக்கு கோவை குனியமுத்தூர் பகுதியில் ஒரு வீடு உள்ளது.
இந்நிலையில், இவர் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் பெரோஸின் பெங்களூரு நகரில் உள்ள உணவகத்தில் சோதனையை தொடங்கியதாக கூறப்படுகிறது.
மேலும், சோதனையின் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள அவரது வீட்டுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத 4 கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் கட்டு கட்டாக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இந்த சோதனையில் பெரோஸ்கானின் வீட்டில் துப்பாக்கி ஒன்று சிக்கியுள்ளது. துப்பாக்கியை மீட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், இதுகுறித்து கோவை மாநகர காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறையினர் மேற்கொண்ட விசாணையில், பெரோஸ்கான் வைத்திருந்தது ஏர் கன் வகையிலான துப்பாக்கி என்பது தெரிய வந்துள்ளது. மேலும், பணத்தை கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள், இது குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:டாஸ்மாக்கில் ரூ.10 எக்ஸ்ட்ரா கேட்ட மேலாளர்.. ஸ்வைப்பிங் மெஷினை திருடிச் சென்ற மதுபிரியர்!