திருச்சி:சிலம்பம் என்பது ஒரு தற்காப்பு கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டாகும். முந்தைய காலத்தில் நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டம் போட்டியில் விளையாடுவார்கள். இன்றைய தலைமுறையில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சிலம்பாட்டத்தை கற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில், சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி திருச்சி தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு கூட்ட அரங்கில், சிலம்பம் உலக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த சிலம்ப போட்டியில் ஒற்றைக் கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, வாள்வீச்சு, சிலம்பம் சண்டை, அலங்கார வரிசை மான் கொம்பு, வேல் கம்பு, சுருள்வாள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, மலேசியா, துபாய் ,சிங்கப்பூர், ஸ்ரீலங்கா,கத்தார் ,போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலம்ப வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சிலம்பம் உலக சம்மேளனத்தின் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களும், வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டது.