சென்னை:பொங்கல் பண்டிகையில் இன்று மூன்றாவது நாளாக காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. காணும் பொங்கல் அன்று உறவினர்கள், நண்பர்களை காணச் செல்வது, சுற்றுலா இடங்களில் பொழுதை கழிப்பது மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கலான இன்று பொதுமக்கள் சுற்றுலா இடங்களை நோக்கி குடும்பம், குடும்பமாக சென்று மகிழ்ந்தனர்.
ஆன்லைன் டிக்கெட்: குறிப்பாக சென்னை புறநகரில் உள்ள வண்டலூர் உயிரியியல் பூங்காவை காண இன்று ஏராளாமான மக்கள் குடும்பம், குடும்பமாக திரண்டனர். அதிக அளவு பார்வையாளர்களை எதிர்பார்த்து முன்னதாகவே பூங்கா நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. வண்டலூர் பூங்காவை பார்வையிட ஆன்லைன் முறையில் நுழைவு கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற முடிந்ததால் இந்த முறை நேரடியாக டிக்கெட் வாங்குவதற்கான கவுண்டர்களில் சிலர் மட்டுமே டிக்கெட்கள் பெற்றனர். அதே போல ஏராளமான வாகனங்களை நிறுத்தும் வகையில் கூடுதல் இடத்தையும் பூங்கா நிர்வாகம் ஒதுக்கி இருந்தது.
பெற்றோருடன் வரும் சிறுவர்கள் தொலைந்து போகாமல் இருக்க சிறுவர்கள் கைகளில் அணியும் காகித வளையம் ஒன்று வழங்கப்பட்டது. அதில் பெற்றோரின் பெயர், தொலைபேசி எண், முகவரி ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது. ஒருவேளை சிறுவர்கள் வழி தவறி போனால், மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக பூங்கா நிர்வாகத்தினர் கூறினர்.
பாதுகாப்பு:மேலும் உயிரியியல் பூங்காவில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் உள்ளே புகுந்து விடாதவாறும் பாதுகாக்க 150 போலீசார், வனத்துறை ஊழியர்கள் 115 பேர் மற்றும் தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பொதுமக்களின் அவசரத்தேவைக்காக மருத்துவக்குழுவினர் அடங்கிய குழு, ஆம்புலன்ஸ் தயாராக வைக்கப்பட்டிருந்தது. போதுமான அளவில் குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மேலும் தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
வண்டலூர் உயிரியியல் பூங்கா (Image credits-ETV Bharat Tamil Nadu) காணும் பொங்கல் தினத்தன்று மட்டுமின்றி மாட்டு பொங்கல் தினமான நேற்றே வண்டலூர் உயிரியியல் பூங்காவுக்கு அதிக அளவிலான பார்வையாளர்கள் வந்திருந்தன. குறிப்பாக நேற்று 30,000 பார்வையாளர்கள் வருகை தந்ததாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர். காணும் பொங்கல் தினமான இன்று இன்று காலை முதலே குழந்தைகள், இளைஞர்கள், முதியோர் என குடும்பம், குடும்பமாக ஏராளமானோர் வண்டலூர் உயிரியியல் பூங்காவை சுற்றிப்பார்க்க திரண்டனர்.
வழக்கமாக சிங்கம், புலி சிறுத்தை போன்ற எல்லோருக்கும் தெரிந்த விலங்குகளை காண்பதை விடவும் அரிய வகை விலங்குகளைக் காணவே மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். குறிப்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் அண்மையில் பிறந்து பராமரிக்கப்பட்டு வரும் நீலகிரி மந்தி, சிங்க-வால் குரங்கு, இந்தியக் காட்டெருது, நீலமான், கூழைக்கிடா போன்ற விலங்குகளை காண பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டினர்.
அரிய பறவைகளை காண ஆர்வம்:அதேபோல சில நாட்களுக்கு முன்பாக வண்டலூர் உயிரியியல் பூங்காவுக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட வெள்ளை புலி , கரடி,சிம்பன்சி குரங்குகள்,நீர்யானை,காண்டாமிருகம், அனுமான் குரங்கு உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் க்ரிஃபோன் கழுகு, எகிப்திய கழுகுகள் போன்றை அரிய வகை பறவைகளையும் மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.
மேலும் பலர் குடும்பம் குடும்பமாக வந்தவர்கள் உணவு கொண்டு வந்து அதனை பூங்காவிற்குள் அமர்ந்து பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு உண்டு மகிழ்ந்தனர். காணும் பொங்கலான இன்று மட்டும் மதியம் 2 மணி நிலவரப்படி வண்டலூர் உயிரியியல் பூங்காவுக்கு 20,000 பேர் வருகை தந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடுவிடம் பேசிய பார்வையாளர் ஒருவர், "விலங்குகளை காண்பதற்கும், அமைதியான முறையில் இயற்கையை ரசிப்பதற்கும் வந்துள்ளோம். புத்தகங்கள், தொலைகாட்சிகளில் மட்டுமே விலங்குகளை பார்த்து மகிழ்ந்த எங்கள் குழந்தைகள் இன்றைக்கு விலங்குகளை நேரடியாக கண்டு ரசித்தனர். ஓய்வின்றி வேலை, வேலை என்று பரபரப்புடன் இருக்கும் சென்னை வாழ்க்கைக்கு இடையே உயிரியியல் பூங்காவுக்கு வருகை தந்தது பெரியவர்களான எங்களுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளது,"என்றார்.
நம்மிடம் பேசிய மேலும் ஒரு பார்வையாளர், "உயிரியியல் பூங்காவை சுற்றிப்பார்க்க பெரியவர்களுக்கு ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த தொகையை குறைத்தால் இன்னும் அதிகம் பேர் பூங்காவை பார்வையிட வசதியாக இருக்கும். அதே போல வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தையும் குறைக்க வேண்டும்,"என்றார். உயிரியியல் பூங்காவுக்கு குடும்பத்தினருடன் வந்த சில முதியவர்கள் பூங்காவினுள் அதிக தூரம் நடக்க முடியாமல் சிரமப்பட்டனர். உயிரியியல் பூங்காவில் பேட்டரி கார் இயக்கப்பட்ட நிலையில், அதிக பார்வையாளர்கள் காரணமாக இன்று இயக்கப்படவில்லை என்று பூங்கா நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. எனவே, நடந்து செல்லும் நிலை ஏற்ப்பட்டது.
அகஸ்தியர் அருவி:காணும் பொங்கலான இன்று திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே வனப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவியில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். பாபநாசம் வனசோதனைச் சாவடியில் அனைத்து வாகனங்களும் தீவிர கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. பொதுமக்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள், மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அகஸ்தியர் அருவியில் குவிந்த மக்கள் (Image credits-ETV Bharat Tamil Nadu) நெல்லை மட்டும் இல்லாமல் விருதுநகர் தூத்துக்குடி கன்னியாகுமரி மதுரை போன்ற வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் அகஸ்தியர் அருவியில் பொதுமக்கள் குவிந்தனர். அருவியில் மிதமான தண்ணீர் விழுந்ததால் குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அருவியில் குளித்தனர். மேலும் மேகமூட்டத்துடன் லேசான மழை சாரல் விழுந்ததால் இதமான சூழல் நிலவியது. ரம்மியமான இயற்கை சூழலை ரசித்தபடி பொதுமக்கள் அருவியில் குளித்தனர். மேலும் அருகில் உள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது
திருநெல்வேலி டவுணை சேர்ந்த அபி துர்கா,சாந்தி ஆகியோர், "காணும் பொங்கல் விடுமுறையில் அகஸ்தியர் அருவியில் குளித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இதமான சூழல் நிலவியது,"என்றனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன், "குடும்பத்தோடு குளிக்க வந்தோம். கூட்டம் அதிகமாக இருந்தாலும் கூட குடும்பத்தோடு பாதுகாப்பாக குளித்து முடித்தோம்," என்றார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஜு,"முதல் முறையாக அகஸ்தியர் அருவிக்கு வந்திருக்கின்றோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் சென்று விட்டதால், ஒரு வித்தியாசத்துக்காக இங்கு வந்தோம்,"என்றார்.
கும்பக்கரை அருவியில் மக்கள் உற்சாகம் (Image credits-ETV Bharat Tamil Nadu) கும்பக்கரை அருவி: காணும் பொங்கலை முன்னிட்டு தேனி, திண்டுக்கல்,விருதுநகர், மதுரை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவியில் குவிந்தனர்.கும்பக்கரை அருவி பகுதியே வெறும் மனித தலைகளாக தென்பட்டது. சுற்றுலா பயணிகள் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நீரில் குளித்தும், சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள் அருவிக்கு மேல் நீர் தேங்கியுள்ள பகுதிகளில் குளித்தும் காணும் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடினர். வனத்துறையினர், பெரியகுளம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.